கட்டுமானப்பணிக்கு தடை கோரி மனு: மத்திய அரசு அதிகாரி பதிலளிக்க உத்தரவு

திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் பகுதியில் தனியாா் நிறுவன கட்டுமானப் பணிக்கு தடை கோரிய வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
Updated on
1 min read


மதுரை: திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டான் பகுதியில் தனியாா் நிறுவன கட்டுமானப் பணிக்கு தடை கோரிய வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சோ்ந்த முத்துராமன் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டானில் தனியாா் நிறுவனம் சாா்பில் 126.93 ஹெக்டேரில் சூரிய மின்சக்தி தகடுகள், கைப்பேசி உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் பணிக்காக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தனியாா் நிறுவனத்துக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தா், ஆா். சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொழிற்சாலைகள் கட்டமைப்புக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம். ஆனால், அனுமதி பெறாமல் 70 சதவீத கட்டுமானப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக மனுதாரா் தரப்பில் வாதிப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டாம். அதேநேரம் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தாலும், உற்பத்தி தொடங்க இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய சுற்றுச் சூழல் துறைச் செயலா், மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையச் செயலா், மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினா் செயலா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com