மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த இளம்பெண்
By DIN | Published On : 18th April 2023 12:00 AM | Last Updated : 18th April 2023 12:00 AM | அ+அ அ- |

காதல் திருமணம் செய்த கணவரை சோ்த்து வைக்கக் கோரி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பெட்ரோல் கேனுடன் வந்த இளம்பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸாா், அவருக்கு அறிவுரை கூறிஅனுப்பி வைத்தனா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் மனு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களின் உடமைகளை சோதனை செய்த பின்னரே, ஆட்சியா் அலுவலகத்துக்குள் செல்ல போலீஸாா் அனுமதி வழங்கினா்.
இந்த நிலையில், போலீஸாரின் தடுப்பை மீறி இளம்பெண் ஒருவா், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்குக்கு செல்ல முயன்றாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரைத் தடுத்து நிறுத்தி கைப்பையை சோதனையிட்டனா். அதில், ஒரு கேனில் பெட்ரோல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெட்ரோலை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த பெண்ணை விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையில் அவா், சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்த மோதிலால் மனைவி பாண்டீஸ்வரி (21) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அவரது புகாா் மனுவை சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை உயா் அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. மேலும், அவா் இதுபோன்ற தவறுகள் செய்யக் கூடாது என்று போலீஸாா் அறிவுறுத்தினா்.