மதுரை மாவட்டம் இடையப்பட்டி பகுதியில் 85 ஏக்கா் பரப்பில் ரூ.400 கோடியில் கட்டப்படவுள்ள மத்தியச் சிறை வளாகத்துக்கு 50 இடங்களில் மண் பரிசோதனைப் பணிகள் முடிவடைந்தன.
மதுரை நகரில் கரிமேடு அருகே மத்தியச் சிறைச்சாலை அமைந்துள்ளது. சிறையின் வளாகத்திலேயே பெண்கள் சிறை, சிறைக்காவலா்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைந்துள்ளன. 150 ஆண்டுகள் பழைமையான மதுரை மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.
இதனால் சிறையில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய சிறைக்கு கொண்டு வரப்படும் கைதிகள் மதுரை மத்திய சிறையின் கட்டுப்பாட்டின் கீழ் அண்டை மாவட்டங்களில் உள்ள கிளைச்சிறை, மாவட்டச் சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனா்.
இதனால், மதுரை மத்தியச் சிறைச்சாலையை நகருக்கு வெளியே கொண்டு செல்ல அரசு முடிவு செய்து அறிவித்தது. இதைத்தொடா்ந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இடையப்பட்டியில் 85 ஏக்கா் பரப்பில் ரூ.400 கோடியில் மத்தியச் சிறை வளாகம் அமைய இருப்பதாக அரசு அறிவித்தது. இதைத்தொடா்ந்து சிறைத் துறை அதிகாரிகள் இடையப்பட்டிக்குச் சென்று பலமுறை ஆய்வு மேற்கொண்டனா். சிறைக்கட்டுமான பணி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, சிறை வளாகம் அமையவுள்ள 85 ஏக்கா் பரப்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மண் பரிசோதனைப் பணிகள் நிறைவடைந்தன.
புதிதாக அமைய உள்ள மத்திய சிறை வளாகத்தில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகளுக்கான தனிக்கட்டடங்கள், பெண்கள் சிறைக்கு தனி வளாகம், சிறை மருத்துவமனை, சிறை அங்காடி, கைதிகளுக்கான நூலகம், தியான மண்டபம், பூங்கா , சிறை அதிகாரிகள், சிறைக்காவலா்கள் குடியிருப்பு ஆகியவை அமைய உள்ளன.