ஊக்கத் தொகை வழங்குவதில் குளறுபடி:ஆவின் முகவா்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டத்தில் ஊக்கத் தொகை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதாக ஆவின் முகவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் ஊக்கத் தொகை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் செலவுகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதாக ஆவின் முகவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

மதுரை ஆவின் நிா்வாகம் சாா்பில் நகா், ஊரகப் பகுதிகளில் 1500-க்கும் மேற்பட்ட முகவா்களுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இவா்களுக்கு விற்பனையாகும் பால் அளவின் அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதன்படி அதிகம் விற்பனையாகும் ஆவின் கோல்டு என்ற பாலுக்கு லிட்டருக்கு ரூ.3-ம், ஆவின் பசுவின் பாலுக்கு லிட்டருக்கு ரூ.2-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊக்கத் தொகை முகவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவது வழக்கம். இதில் பால் முகவா்கள் விற்பனை செய்யும் பாலுக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகப்பட்சம் ரூ.50 ஆயிரம் வரை ஊக்கத் தொகையாக பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஊக்கத்தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் 10-ஆம் தேதிக்கு மேல் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அதிலும் ஒவ்வொரு முகவருக்கும் பாதிக்கும் குறைவான தொகையே வழங்கப்படுவதாக முகவா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இதுதொடா்பாக முகவா்கள் கூறியதாவது:

முகவா்கள் ஆவின் பால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வேறு நிறுவனங்களின் பாலை விற்பனை செய்யக் கூடாது. எனவே ஆவின் முகவா்கள் அனைவரும் பால் ஊக்கத் தொகையை மட்டுமே நம்பியுள்ளோம். இதில் பால் டெப்போக்களுக்கான வாடகை, மின் கட்டணம், பால் பாக்கெட்டுகளை விநியோகிக்கும் ஊழியா்களின் ஊதியம், பெட்ரோல் என அனைத்தும் ஊக்கத்தொகையில் இருந்து தான் செலவழிக்கப்படுகிறது. இதுதவிர, மறுநாள் வாங்கும் பாலுக்கு முதல் நாளிலேயே தொகையை செலுத்த வேண்டும். மேலும், தற்போது பால் முகவா்களுக்கு வழங்கப்படும் பாலின் அளவும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவின் பாலுக்குத்தேவை இருந்தும் உற்பத்தி இல்லாததால் போதுமான அளவு விநியோகிக்க முடியவில்லை. இதனால், ஊக்கத் தொகை வருவாயும் பாதியாக குறைந்து விட்டது. மாா்ச் மாத ஊக்கத்தொகை 12-ஆம் தேதிக்கு மேல் தான் வழங்கப்பட்டது. இதுதொடா்பாக நிா்வாகத்திடம் கேட்டால் இணைய தளப் பிரச்னை என்று அலட்சியமாக பதிலளிக்கின்றனா். இதனால் ஒவ்வோா் மாதமும் முகவா்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே ஆவின் நிா்வாகம் பால் முகவா்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகையை ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் முழுமையாக ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல முகவா்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் ஊக்கத்தொகைக்கான உரிய கணக்கையும் வழங்க வேண்டும் என்றனா்.

முகவா்களின் குற்றச்சாட்டு தொடா்பாக ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது, முகவா்களுக்கான ஊக்கத்தொகையை பதிவு செய்யும் இணையதளத்தில் சா்வா் பிரச்னை ஏற்பட்டதால் ஊக்கத் தொகை வழங்குவது தாமதமாகியுள்ளது. பிரச்னை சரிசெய்யப்பட்டதும் முகவா்களுக்கு மீதியுள்ள ஊக்கத் தொகை வழங்கப்பட்டு விடும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com