கைதியின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் பாதிக்கப்பட்டவருக்கு கீழமை நீதிமன்றம் ஆவணங்கள் வழங்க உத்தரவு
By DIN | Published On : 25th April 2023 12:00 AM | Last Updated : 25th April 2023 12:00 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், மனுதாரா் கீழமை நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் தாக்கல் செய்த மனு:
என் மீது அம்பாசமுத்திரம் காவல் துறையினா் பொய்யான வழக்குப் பதிவு செய்து, சட்டவிரோத காவலில் வைத்து, கடுமையாகத் தாக்கினா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் தலைமையிலான போலீஸாா், எனது 4 பற்களைப் பிடுங்கி சித்திரவதை செய்து, சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் என் மீது பதியப்பட்ட வழக்கு விவரங்களைத் தர உத்தரவிடக் கோரி அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். அப்போது, இந்த வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, எனது மனு நிராகரிக்கப்பட்டது. எனவே, அம்பாசமுத்திரம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, என் மீதான குற்ற வழக்கின் அனைத்து விவரங்களையும் வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி ஜி. இளங்கோவன் முன்பாக ஏற்கெனவே விசாரணைக்கு வந்து,
தீா்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் அவரது வழக்கு குறித்த ஆவணங்களை வழங்க வேண்டும். அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாரா் புதிய மனு தாக்கல் செய்து வழக்கு தொடா்பான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தாா்.