மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த அறிவுறுத்தல்

மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு தமிழகம் முழுவதும் அமல்படுத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை அரசு தமிழகம் முழுவதும் அமல்படுத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை அறிவுறுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், பனைவயலைச் சோ்ந்த கலைராஜன் தாக்கல் செய்த மனு:

பனைவயல் கிராமத்தில் வசிக்கும் சுமாா் 400 குடும்பத்தினா் அங்குள்ள அத்தாணி கண்மாயை நம்பியே வாழ்ந்து வருகின்றனா். இந்தக் கண்மாய் அருகே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுபானக் கடை திறக்கப்பட்டது. அப்போது, அதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அந்தக் கடை மூடப்பட்டது.

இந்த நிலையில், கண்மாய் அருகே புதிதாக இரண்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கோயில் அருகே இந்தக் கடைகள் திறக்கப்பட்டிருப்பதால், பக்தா்கள்,பெண்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், இந்தக் கடைகளில் மது அருந்துவோா், காலி மதுப் புட்டிகள், நெகிழிப் பைகளை கண்மாய், விவசாய நிலங்களில் வீசிச் செல்கின்றனா்.

எனவே, இந்த மதுபானக் கடைகளை அகற்றக் கோரி, அரசு அலுவலா்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி, மனுதாரா் சமா்ப்பித்துள்ள புகைப்படத்தில் கண்மாய்களில் மதுப் புட்டிகள் வீசப்பட்டுள்ளது தெளிவாக உள்ளது. மதுப் புட்டிகளை திரும்பப் பெறுவது தொடா்பான திட்டம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவில்லையா? எனக் கேள்வி எழுப்பினா்.

அப்போது அரசுத் தரப்பில், மதுப் புட்டிகளைத் திரும்பத் பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் சோதனை முறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் சிறப்பானதாகும். எனவே, தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். இந்தத் திட்டம் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்தும், சோதனை முறை எனக் கூறுவது ஏன்?. எத்தனை மாவட்டங்களில் சோதனை முறையில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் மட்டும் அமல்படுத்தினால் போதுமா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

பின்னா், இந்த வழக்கு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com