குடியிருப்பு அருகே கல்குவாரிக்கு அனுமதி: புதுக்கோட்டை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 25th April 2023 12:00 AM | Last Updated : 25th April 2023 12:00 AM | அ+அ அ- |

குடியிருப்பு அருகே கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா், கனிம வளத் துறை அதிகாரிகள் பதில் அளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கொப்பம்பட்டியைச் சாா்ந்த ரத்தினகுமாா் தாக்கல் செய்த பொது நல மனு: கொப்பம்பட்டியில் ஏராளமானோா் விவசாயத் தொழில் செய்து வருகின்றனா். இங்குள்ள குளங்கள், கண்மாய்கள் கிராம மக்களின் குடி நீா், விவசாயப் பாசன ஆதாரங்களாக உள்ளன.
இந்த நிலையில், கொப்பம்பட்டி பகுதியில் மாவட்ட நிா்வாகம் தனியாருக்கு கல்குவாரி நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
300 மீட்டருக்குள் குடியிருப்புகள் இருந்தால் கல் குவாரி அனுமதி வழங்கக் கூடாது என்பது விதி. ஆனால், விதிமுறைகளை மீறி கல்குவாரி நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
எனவே, சட்டத்துக்குப் புறம்பாக கல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு: கொப்பம்பட்டியில் குவாரி நடத்த அனுமதி வழங்கியது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா், கனிம வளத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.