கோயில் காடுகளைப் பாதுகாக்க ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 25th April 2023 12:00 AM | Last Updated : 25th April 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம், இடையப்பட்டி வெள்ளிமலை கோயில் காடுகளைப் பாதுகாக்க வலியுறுத்தி அந்தப் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் முகாமில் ஆட்சியா் எஸ். அனீஷ்சேகரிடம் அவா்கள் அளித்த மனு விவரம்:
மதுரை மாவட்டம், தெற்கு ஆமூா் கிராம ஊராட்சிக்கு உள்பட்ட இடையப்பட்டி கிராமத்தில் வெள்ளிமலை கோயில் காடுகள் என்ற நிலப்பகுதி அமைந்துள்ளது. இடையப்பட்டி, தெற்காமூா், சொருக்குளிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு வாழ்வாதாரமாக இந்த நிலப்பகுதி விளங்குகிறது.
700 ஏக்கராக பரப்பளவாக இருந்த இந்த நிலம், தற்போது 490 ஏக்கா் பரப்பளவாகக் குறைந்து விட்டது. இதில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையம், மத்திய பாதுகாப்புப் படை மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, மதுரை மத்தியச் சிறைக்கு இந்த நிலத்தில் சுமாா் 85 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இடையப்பட்டி சுற்றுவட்டார மக்கள் தங்களது கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தி வரும் இந்த நிலத்தை பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய பல்லுயிா் சூழல் பகுதியாக அறிவிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.