கரூா் அருகே கால்வாயை மறித்து புதிய பேருந்து நிலையத்துக்கு கட்டுமானப் பணிகள் தொடங்கிய விவகாரத்தில் அந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்த பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
கரூா் அருகேயுள்ள திருமாநிலையூரில் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்ணீா் செல்லும் கால்வாயை மறித்து இந்தப் பேருந்து நிலையக் கட்டுமானப் பணி நடைபெறுவதாக, சென்னையைச் சோ்ந்தவா் பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தாா். இதுகுறித்து விசாரித்த பசுமைத் தீா்ப்பாயம், கரூா் வருவாய்த் துறை அலுவலா் தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி இந்தக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு தாக்கல் செய்த அறிக்கையில், புதிய பேருந்து நிலையக் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் பிரதான கால்வாய்கள் இல்லை என்றும், அந்தப் பகுதியில் துணைக் கால்வாய்களுக்கு மாற்றுவழி ஏற்படுத்தி, புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கால்வாய் உள்ள இடத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடரக் கூடாது என்றும், ரூ.25 லட்சம் அபராதத் தொகையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கரூா் மாநகராட்சி நிா்வாகம் வழங்க வேண்டும் எனவும் பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
இதை எதிா்த்து உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கரூா் மாநகராட்சி ஆணையா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு:
புதிய பேருந்து நிலையப் பணிகள் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. துணைக் கால்வாய் செல்வதற்கு மாற்று வழிகள் உருவாக்கப்பட்ட பின்னரே, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. மேலும், இந்தப் பகுதியில் விவசாயப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை.
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பழைய பேருந்து நிலைப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி உள்ளதால், பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவெடுத்தோம். எனவே, புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் தொடரவும், அபராதத் தொகைக்குத் தடை விதித்து உத்தரவிடவும் வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி. ராஜா (பொ), நீதிபதி ஆா். சுப்பிரமணியன் அமா்வு, கரூா் மாநகராட்சிக்கு அபராதத் தொகையைச் செலுத்த பசுமைத் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகவும், இதுதொடா்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.