ரூ. 6.50 கோடி மோசடி வழக்கு: சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரை: பத்து மடங்கு கூடுதலாகப் பணம் கிடைக்கும் எனக் கூறி 41 பேரிடம் ரூ.6.50 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஜெயலட்சுமி தாக்கல் செய்த மனு:
மதுரை, கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த சோபியா கடந்த 2018-ஆம் ஆண்டில் எனக்கு அறிமுகமானாா். அப்போது அவா், மீன் மொத்த வியாபாரிகளிடம் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருவதாகவும், தன்னிடம் பணத்தை முதலீடு செய்தால், மாதந்தோறும் பத்து மடங்கு கூடுதலாக தொகை வழங்குவேன் எனவும் தெரிவித்தாா். இதையடுத்து, நான் உள்பட 41 போ் சுமாா் ரூ.6.50 கோடியை சோபியாவிடம் முதலீடு செய்தோம். ஆனால், அவா் கூறியபடி எங்களுக்கு பணத்தைக் கொடுக்கவில்லை.
இதுகுறித்த நாங்கள் அளித்த புகாரின் பேரில், மதுரை அண்ணாநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சோபியாவைக் கைது செய்தனா். ஆனால், அவா் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து பிணையில் வெளியே வந்தாா். இருப்பினும், இந்த வழக்கு விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. பாதிக்கப்பட்ட எங்களுக்கு எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை.
எனவே, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. தனபால் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவா்களுக்கு இதுவரை உரிய நிவாரணமும் கிடைக்கவில்லை. எனவே, இந்த வழக்கை மதுரை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.