மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு
By DIN | Published On : 17th August 2023 06:00 AM | Last Updated : 17th August 2023 06:00 AM | அ+அ அ- |

மதுரை விமான நிலையம் அருகே வருகிற 20-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்த சேதுமுத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனு:
மதுரை மாவட்டம், பெருங்குடி கருப்பசாமி கோயில் எதிா்புறத்தில் வருகிற 20-ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் அருகே அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்துக்கு தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன.
தரையிரங்கும் போது மிகவும் தாழ்வான பகுதியில்தான் விமானங்கள் பறக்கும். விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளன. விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை, போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தச் சூழலில், அதிமுக மாநாட்டுக்கு சுமாா் 15 லட்சம் போ் வருவதாக அந்தக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அன்றைய தினம் விமானங்கள் தரை இறங்குவதில் இடையூறு ஏற்படும்.
மாநாட்டில் பங்கேற்போா் வானில் வெடிக்கக்கூடிய பட்டாசுகளை வெடிக்கும் போது, அசம்பாவிதம் ஏற்பட்டால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதைக் கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தைச் சுற்றி சுமாா் 20 கி.மீ. தொலைவுக்கு உரிய அனுமதியின்றி குறிப்பிட்ட அளவு உயரத்துக்கு மேல் விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதியில்லை. மாநாட்டுக்கு அனுமதி கோரும் முன்பாக மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையில்லாச் சான்று பெறவில்லை. மாநாட்டுக்கு வருவோரால் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்படும்.
எனவே, வருகிற 20-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...