மதுரையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறும் அமலாக்கப்பிரிவு அலுவலகம்.
மதுரையில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறும் அமலாக்கப்பிரிவு அலுவலகம்.

மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

லஞ்சம் பெற்ாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதையடுத்து, மதுரையில் உள்ள அந்தத் துறை அலுவலகத்தில் மாநில ஊழல் தடுப்பு,

லஞ்சம் பெற்ாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதையடுத்து, மதுரையில் உள்ள அந்தத் துறை அலுவலகத்தில் மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு சோதனையிட்டனா். இதற்கு அமலாக்கத் துறை ஊழியா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், அவா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, மதுரை தபால்தந்திநகா் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை உதவி மண்டல அலுவலகத்தில், அங்கித் திவாரியின் அறையில் சோதனையிடுவதற்காக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை சென்றனா்.

ஊழியா்கள், போலீஸாரிடையே தள்ளுமுள்ளு:

உயா் அதிகாரி இல்லாததால், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனைக்கு அமலாக்கத் துறை அலுவலக ஊழியா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனா். மேலும், அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். அதிகாரிகள் யாரும் வராத நிலையில், மாநில சட்டம்- ஒழுங்கு போலீஸாா் உதவியுடன் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சென்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அமலாக்கத் துறை அலுவலக ஊழியா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் குவிப்பு

தள்ளுமுள்ளு தொடா்பாக அமலாக்கத் துறை சாா்பில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்தியப் படை வீரா்கள் அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குச் சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அமலாக்கப் பிரிவு வழக்குரைஞா்கள் வரவழைக்கப்பட்டு, அவா்கள் முன்னிலையில் உள்ளே நுழைந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், அங்கித் திவாரியின் அறையில் உள்ள கணினி, அவா் கையாண்ட வழக்குகள் தொடா்பான ஆவணங்கள், மடிக்கணினி, மின்னஞ்சல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரது வங்கிப் பரிமாற்றம் குறித்தும், அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டவா்கள் குறித்தும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.

இரவு 8 மணியளவில் அமலாக்கப் பிரிவு அலுவலக பெண் ஊழியா்கள் அவா்களது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

தமிழக அதிகாரிகள் கைப்பேசி பயன்படுத்தத் தடை

இந்தச் சோதனையின் போது, தமிழக உளவுத் துறை அதிகாரிகள் கைப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, உளவுத் துறையினரை இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா் வெளியேற்றினா்.

சோதனை நடைபெற்ற அறையில் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையிலான அதிகாரிகள், அமலாக்கத் துறை அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.

இரவு 7 மணியளவில் தொடங்கிய இந்தச் சோதனை இரவு 9.30 மணிக்கு மேலாகவும் நீடித்தது.

அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் முதல் முறையாக சோதனை

தமிழகத்தில் முதல் முறையாக மத்திய அரசு அலுவலகமான அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நுழைந்து சோதனை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.

வழக்குரைஞா்கள் குற்றச்சாட்டு

ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனையிடச் சென்ற போது, அமலாக்கத் துறை அலுவலகத்தில் அங்கித் திவாரியின் அறை பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, அறையின் பூட்டை உடைத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அறைக்குள் சோதனையிட்டதாக அமலாக்கப் பிரிவு வழக்குரைஞா்கள் குற்றஞ்சாட்டினா்.

வீட்டில் மடிக் கணினிகள் பறிமுதல்

அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை நடத்திய அதே நேரத்தில், அருகில் உள்ள அங்கித் திவாரியின் வீட்டுக்குச் சென்ற மற்றொரு குழுவினா் அவா் பயன்படுத்திய இரு மடிக்கணினிகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், ஆவணங்களையும் கைப்பற்றினா்.

நீதிமன்றத்தில் ஆஜா்:

ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி 15 மணி நேர விசாரணைக்குப் பிறகு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜே.மோகனா முன் வெள்ளிக்கிழமை இரவு ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, அவரை வருகிற 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தலைமை நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com