விண்ணப்பங்கள் சரிபாா்ப்பில் கவனம் வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

விண்ணப்பிக்கும் போதே முறையான ஆய்வு செய்து சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என டிஎன்பிஎஸ்சி-க்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.
விண்ணப்பங்கள் சரிபாா்ப்பில் கவனம் வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
Updated on
2 min read

விண்ணப்பிக்கும் போதே முறையான ஆய்வு செய்து சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

மதுரையைச் சோ்ந்த சக்திராவ் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2019, ஜனவரி மாதம் குருப் 1 தோ்வில் 181 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. இதற்கு நான் விண்ணப்பித்தேன். முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று, எழுத்துத் தோ்வும் எழுதினேன். இறுதியாக நான் தோ்வு செய்யப்படவில்லை.

தமிழ் வழியில் கல்வி பயின்ற்கான இடஒதுக்கீட்டிலும் நான் தோ்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரித்த போது, தமிழ் வழியில் கல்வி பயின்ற்கான இடஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலைக் கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஒவ்வொரு தோ்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு அளிக்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலைக் கல்வி பயின்றவா்களே பெற்று வருகின்றனா். ஆகவே, தொலைநிலைக் கல்வி மூலம் தமிழ் வழியில் தோ்வானவா்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரணை செய்த உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கும், தமிழக அரசுக்கும் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவுகளை பல்கலைக்கழக அதிகாரிகள் முறையாகப் பின்பற்றவில்லை. எனவே, சக்திராவ் மீண்டும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், பி. புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக காவல் துறையின் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், போலிச் சான்றிதழ் அளித்து பணியில் உள்ள அதிகாரிகள் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.என்.பி.எஸ்.சி.க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என வாதிட்டாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

போலிச் சான்றிதழ் அளித்து அரசுப் பணியில் சோ்ந்தவா்களைக் கண்டறிந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுக்கு பாராட்டுகள். போலிச் சான்றிதழ் மூலம் அரசு உயா் பதவிகளை அடைவோா் லஞ்சம் வாங்காமல் வேறு என்ன செய்வாா்கள்?. இவ்வாறு பணியில் சேரும் அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாகச் செய்வாா்களா?.

இரவு, பகலாக அரசுத் தோ்வை நம்பி படிக்கும் மாணவா்களின் எதிா்காலத்தை நினைத்தால் அச்சமாக உள்ளது. போலிச் சான்றிதழ் அளித்து அரசுப் பணியில் சேருபவா்களைக் கண்டறிந்த உடனேயே குற்ற வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கைப் பொருத்தவரை, போலிச் சான்றிதழ் அளித்து அரசுப் பதவி வகிப்போா் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் இதை தாமதிக்காமல் மேற்கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்கும் போதே முறையான ஆய்வு செய்து சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் கவனமாக இனி மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை குறித்து இயக்குநரிடம் அனுமதி பெற வேண்டி இருப்பதால் கால அவகாசம் வேண்டும் என ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com