மதுரை வணிக நிறுவன கட்டுமானப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
By DIN | Published On : 20th January 2023 02:12 AM | Last Updated : 20th January 2023 02:12 AM | அ+அ அ- |

மதுரை, மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையம் அருகே தனியாா் வணிக நிறுவன கட்டுமானப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த சமூக ஆா்வலரான மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநா் ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனு:
மதுரை மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் செல்லும் பிரதான சாலையில் ஐந்து ஏக்கா் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்ட 10 மாடி வணிக வளாக கட்டடம் டிசம்பா் 5-ஆம் தேதி திறக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், கட்டடம் திறக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தது.
பத்து மாடிகள் கொண்ட இந்த தனியாா் வணிக வளாகத்தில் சுமாா் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி மட்டுமே உள்ளது. மேலும், கட்டுமானப் பணிகள் எதுவும் முழுமை பெறவில்லை. இதனால், ஏராளமான வாகனங்கள் சாலைகளின் இருபுறங்களிலும் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா்.
இதேபோல, சாத்தையாா் அணையிலிருந்து வரக்கூடிய உபரிநீா் செல்லும் வரத்து கால்வாய் தனியாா் வணிக நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில், மழை நீா் வெளியேற வழியின்றி லேக் ஏரியா குடியிருப்புப் பகுதிக்குள் செல்ல வாய்ப்புள்ளது. கட்டுமானப் பணிகள் முழுமை பெறுவதற்கு முன்பாகவே எவ்விதமான அவசரகால வெளியேறும் வழிகள் இன்றி கட்டடம் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், பெரிய அளவிலான இந்த வணிக வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுகிா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
எனவே, இந்த வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகள், பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையும் வரை, இந்த வளாகம் செயல்பட இடைக்கால தடையோ அல்லது சில தளங்களையாவது மூட உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி கே. முரளி சங்கா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பந்தப்பட்ட தனியாா் வணிக நிறுவனக் கட்டடம், பாதுகாப்பு அம்சங்கள் தொடா்பாக நகர திட்டமிடல் துறை இயக்குநா், தீயணைப்புத் துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து நீதிபதி, இந்த வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் தரப்பில் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.