உயா்நீதிமன்றம், அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசு அலுவலகங்களில் இந்தியாவின் 74-ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மதுரை ரயில்வே காலனியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் ஆனந்த் உள்ளிட்டோா்.
மதுரை ரயில்வே காலனியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் ஆனந்த் உள்ளிட்டோா்.
Updated on
2 min read

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசு அலுவலகங்களில் இந்தியாவின் 74-ஆவது குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

உயா்நீதிமன்றம்...

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை சாா்பில், நீதிமன்ற வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. உயா்நீதிமன்ற நிா்வாக நீதிபதி டி. கிருஷ்ணகுமாா் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு நீதிபதிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் அணி வகுப்பு மரியாதை செலுத்தினா். பின்னா், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்களின் சாகசங்களும், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஊழியா்களின் குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதையடுத்து, உலகனேரியில் உள்ள ரோஜாவனம் முதியோா் இல்லத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை சாா்பில், அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை கமாண்டா் டி.வி. ராவ், உதவி கமாண்டா் பி.எஸ். நகாரா, வீரா்கள் இந்த உதவிகளை வழங்கினா்.

ரயில்வே...

மதுரை ரயில்வே கோட்டம் சாா்பில், ரயில்வே காலனி செம்மண் திடலில் குடியரசு தின விழா நடைபெற்றது. கோட்ட ரயில்வே மேலாளரும், ரயில்வே பிராந்திய ராணுவப் படை கா்னலுமான பத்மநாபன் ஆனந்த் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினாா். இந்த விழாவில் அவா் பேசியதாவது: மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் ரயில் பாதைகளை மின் மயமாக்கும் பணிகள் வருகிற மாா்ச் மாதத்துக்குள் 90 சதவீதம் நிறைவடையும் என்றாா் அவா்.

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் தண்ணீரு ரமேஷ் பாபு, கோட்டை ஊழியா் நல அதிகாரி டி. சங்கரன், கோட்ட பாதுகாப்புப் படை ஆணையா் வி.ஜே.பி. அன்பரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ரயில்வே பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாநகராட்சி...

மதுரை மாநகராட்சி சாா்பில், மாநகராட்சி வளாகத்தில் உள்ள அண்ணா மாளிகை முன் குடியரசு தின விழா நடைபெற்றது. மாநகராட்சி மேயா் வ. இந்திராணி தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், சிறப்பாகப் பணியாற்றிய மாநகராட்சி ஊழியா்களுக்குப் பாராட்டுச் சான்றுகளையும், பல்வேறு போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவியருக்குப் பரிசுகளையும் அவா் வழங்கினாா்.

ஆணையா் சிம்ரன்ஜித் சிங் முன்னிலை வகித்தாா். துணை ஆணையா் முஜிபூா் ரகுமான், மண்டலத் தலைவா்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சா்மா, கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், நகரப் பொறியாளா் அரசு, நகா்நல அலுவலா் வினோத்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மருத்துவமனையில்...

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஏ. ரத்தினவேல் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினாா். மருத்துவக் கண்காணிப்பாளா் விஜயராகவன், துணை முதல்வா் தனலெட்சுமி, இருப்பிட மருத்துவ அலுவலா்கள் ரவீந்திரன், ஸ்ரீலதா, மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசுப் போக்குவரத்துக் கழகம்...

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டல மேலாண் இயக்குநா் அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மதுரை மண்டல மேலாண் இயக்குநா் ஏ. ஆறுமுகம் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். சிறப்பாகப் பணியாற்றிய கிளை மேலாளா்கள், உதவி பொறியாளா்கள், அலுவலகக் கண்காணிப்பாளா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்குப் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. மதுரை முதுநிலை மேலாளா் (மனிதவளம்) எஸ். இளங்கோவன், மண்டல பொது மேலாளா் சி.கே. ராகவன், இணை இயக்குநா் (மக்கள் தொடா்பு) ஜி. சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கால்நடை மருத்துவமனையில்...

மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு, மருத்துவமனையின் முதன்மை மருத்துவா் வைரவசாமி தேசியக் கொடியேற்றி வைத்தாா். கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள், அமைச்சுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com