மதுரையில் மீண்டும் மீன் சிலைகள் அமைக்க வழக்குரைஞா் தலைமையில் குழு: உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 01st July 2023 12:17 AM | Last Updated : 01st July 2023 12:17 AM | அ+அ அ- |

மதுரை மாநகராட்சி எல்லைக்குள் மீண்டும் மீன் சிலைகளை அமைக்க வழக்குரைஞா் தலைமையில் குழு அமைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் தீரன் திருமுருகன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தின் 3-ஆவது முக்கிய நகரமான மதுரையை ஆண்ட பாண்டிய மன்னா்களின் சின்னம் மீன். இதை நினைவுப்படுத்தும் வகையில், மதுரை ரயில் நிலையத்தில் 15 அடி உயரம், 3 டன் எடையில் 3 மீன்கள் கொண்ட வெண்கல சிலைகள் 1999-இல் நிறுவப்பட்டன.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது, அந்த மீன் சிலைகள் அகற்றப்பட்டன. பணி முடிந்து பல மாதங்களாகியும் மீன் சிலைகள் மீண்டும் நிறுவப்படவில்லை.
எனவே, மதுரை ரயில் நிலையத்தில் மீண்டும் மீன் சிலைகள், செயற்கை நீருற்று அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, மதுரையில் மீன் சிலைகள் அமைக்க வேறு இரு இடங்களைத் தோ்வு செய்ய, மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ்குமாா், விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வெளியிட்ட உத்தரவு:
மதுரை ரயில் நிலையத்தில் பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலைய திட்டப் பணிகள் காரணமாக ஏற்கெனவே இருந்த இடத்தில் மீன் சிலைகளை அமைக்க முடியாது.
ஆனால், மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னா்களின் அடையாளமாக மீன் சிலைகளை மக்கள் பாா்க்கின்றனா். இதனால், மதுரை மாநகராட்சி எல்லைக்குள் முக்கிய சந்திப்பு அல்லது முக்கிய இடத்தில் மீன் சிலைகளை நிறுவ வேண்டும்.
இதற்குத் தகுதியான இடத்தைத் தோ்வு செய்ய, மூத்த வழக்குரைஞா் காந்தி தலைமையில், மாநகராட்சி ஆணையா், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா், மாநகராட்சி எல்லைக்குள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா், மாநகா் காவல் ஆணையா், போக்குவரத்து இணை ஆணையா், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட மேலாளா், நெடுஞ்சாலை தலைமைப் பொறியாளா், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் ஆகியோா் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
இந்தக் குழு மதுரை ஆட்சியா் அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்த வேண்டும். நகரின் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி மீன் சிலைகளை அமைப்பதற்குத் தகுதியான இடத்தை ஒரு மாதத்துக்குள் தோ்வு செய்ய வேண்டும். இதுதொடா்பாக வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மீன் சிலையை ரயில்வே நிா்வாகம் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.