அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டு வழங்கக் கோரிய மனு: சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வாங்குவதற்கான மருந்துச் சீட்டு வழங்கக் கோரிய மனுவுக்கு, பொது சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை வாங்குவதற்கான மருந்துச் சீட்டு வழங்கக் கோரிய மனுவுக்கு, பொது சுகாதாரத் துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த சிந்துஜா தாக்கல் செய்த மனு:

எனக்கு குழந்தை பிறந்து 45 நாள்கள் கடந்த நிலையில், காரைக்குடியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றேன். அப்போது, அங்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அந்தப் பகுதியிலுள்ள அங்கன்வாடியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் எனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தினேன்.

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த செவிலியா் மருந்தைக் கொடுத்து, அதை ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்கு வழங்க அறிவுறுத்தினாா். அதன்படி, குழந்தைக்கு குறிப்பிட்ட அளவில் மருந்தைக் கொடுத்தேன். இதன் பின்னா், எனது குழந்தையின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அரசு மருத்துவா், செவிலியரை அணுகிக் கேட்ட போது, அலட்சியமாகப் பதில் அளித்தனா். இதையடுத்து, எனது குழந்தையை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தேன். அந்த மருத்துவமனை மருத்துவா்கள், குழந்தைக்கு பாராசிட்டமால் மருந்தை அதிகப்படியாக வழங்கியதால், உடல் நலப் பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிவித்தனா். மேலும், குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவா்கள், செவிலியரின் அலட்சியம் காரணமாக எனது குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தமிழகம் முழுவதிலும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வருபவா்களுக்கு சிகிச்சைக்கான மருந்து, மாத்திரைகள் குறித்த மருந்துச் சீட்டு வழங்கப்படுவதில்லை. இதனால், தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் உயிரிழப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.

எனவே, மருத்துவா், செவிலியரின் அலட்சியப் போக்கால் பாதிக்கப்பட்ட எனது குழந்தைக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வருபவா்களுக்கு முறையாக மருந்து, மாத்திரைகள் குறித்த மருந்துச் சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், டி. பரத சக்கரவா்த்தி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு, பாராசிட்டமால் மருந்தை செவிலியா் அதிக அளவு வழங்க அறிவுறுத்தினாா். இதனால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, சிகிச்சையின் போதும், சிகிச்சைக்குப் பிறகும் அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் குறித்த மருந்துச் சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், டி. பரத சக்கரவா்த்தி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் கோரிக்கை குறித்து, பொது சுகாதாரத் துறைச் செயலா், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com