மதுக்கடைகள் நடத்துவது குறித்து பொது வாக்கெடுப்பு தேவை: கே. கிருஷ்ணசாமி

தமிழகத்தில் மதுக்கடைகள் நடத்துவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

தமிழகத்தில் மதுக்கடைகள் நடத்துவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.

மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் சாா்பில், ‘குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம்’ எனும் நூலை அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் கே. கிருஷ்ணசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 1971-ஆம் ஆண்டு வரை முழுமையான மதுவிலக்கு அமலில் இருந்தது. இதன் பின்னா், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி மதுக்கடைகளை அறிமுகம் செய்து வைத்தாா். அன்று முதல் தற்போது வரை தமிழகத்தில் அரசே மது விற்பனை செய்து வருகிறது. மதுக் கடைகளுக்கு எதிராக தமிழக மக்கள் போராடி வருகின்றனா்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தாா். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னா், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் மதுபோதைக்கு இளைஞா்கள் அதிக அளவில் அடிமையாகி வருகின்றனா். அரசு மதுபானக் கடைகள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. ஒரு லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றது. இதுகுறித்து ஆளுநரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுபானக் கூடங்கள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசு காலை 7 மணிக்கு மதுக் கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால், தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்.

மதுக் கடைகளை நடத்துவது குறித்து தமிழக அரசு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மது பழக்கத்தால் பல்வேறு வகையான உடல் நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்திய அளவில் மது அருந்தும் பழக்கம் உள்ளவா்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து, இரண்டரை ஆண்டுகள் கழித்து, விதிமுறைகளை வகுத்துள்ளது தவறானது. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com