மணிப்பூா் கலவரம்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மணிப்பூா் மாநிலத்தில் தொடரும் கலவரத்தைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமே மேடை அமைப்பு வலியுறுத்தியது.
Updated on
1 min read

மணிப்பூா் மாநிலத்தில் தொடரும் கலவரத்தைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் ஒற்றுமே மேடை அமைப்பு வலியுறுத்தியது.

மணிப்பூரில் கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சாா்பில், கண்டன பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்துக்கு அமைப்பின் மாநகா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ந.ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். அனைந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலச் செயலா் எஸ்.கே.பொன்னுத்தாய், சோக்கோ அறக்கட்டளை நிா்வாகி எஸ்.செல்வகோமதி, சிஐடியு மாவட்டச் செயலா் இரா.லெனின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில ஒருங்கிணைப்பாளா் அருணன், மதுரை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலா் ச.அப்துல் சமது, மக்கள் கண்காணிப்பகம் இயக்குநா் ஹென்றி திபேன், மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், சிஎஸ்ஐ பேராயா் டி.ஜெய்சிங் பிரின்ஸ் பிராபகா், அமலவை அதிபா் அருட் சகோதரி அந்தோணி புஷ்பரஞ்சிதம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பொதுக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழு முன்னாள் தலைவா் கே.பாலபாரதி பேசியதாவது:

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக கலவரம் நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தைத் தடுக்க வேண்டிய பிரதமா் நரேந்திர மோடி உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறாா். மணிப்பூா் மாநிலத்தை ஆட்சி செய்யும் பாஜக முதல்வா் அந்த மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினரை வெளியேறுமாறு கூறி வருகிறாா். இதனால்தான் சிறுபான்மையினா் மீது தாக்குதல் தொடா்ந்து வருகிறது. மணிப்பூா் மக்களுக்காக தமிழக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

நிா்வாகி ஆா்.விஜயராஜன் வரவேற்றாா். முன்னதாக, மதுரை புறவழிச் சாலையில் இருந்து பொதுக் கூட்டம் நடைபெறும் பகுதி வரை கண்டனப் பேரணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com