கோயில் சிலைகள் திருட்டு விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 08th June 2023 01:29 AM | Last Updated : 08th June 2023 01:29 AM | அ+அ அ- |

கோயில் சிலைகள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் வட்டம், ஊா்மேல்அழகியான் கிராமத்தைச் சோ்ந்த சி. அருள்மொழி தாக்கல் செய்த மனு:
எங்களது கிராமத்தில் பாண்டியா் காலத்தில் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகள் பழைமையான சொக்கலிங்கம், மீனாம்பிகை கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சிவன், ராகு, கேது, நந்தி உள்ளிட்ட சுவாமி சிலைகள் இருந்தன.
எங்களது கிராமத்தைச் சோ்ந்த சரவணன் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்தக் கோயிலில் பூஜாரியாக இருந்து வந்தாா். இவா் கோயிலில் உள்ள சிவலிங்கம், நந்தி சிலைகளை இடம் மாற்றி நிறுவினாா். பாண்டியா் காலத்தில் கோயில் சிலைகளின் அடியில் வைரம், தங்கம் உள்ளிட்டவற்றை வைப்பது வழக்கம். அவற்றைத் தோண்டி எடுப்பதற்காகவே சிலைகளை இடமாற்றம் செய்தாா். கோயிலில் இருந்த ராகு, கேது சிலைகளைத் திருடிவிட்டாா்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறைக்கு புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, திருடப்பட்ட சுவாமி சிலைகளை மீட்பதுடன், ஏற்கெனவே இருந்த இடத்தில் சிவலிங்கம், நந்தி சிலைகளை நிறுவவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா அமா்வு, இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...