ஒலிபெருக்கி அமைக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: காவல் ஆய்வாளா் கைது
By DIN | Published On : 15th June 2023 10:24 PM | Last Updated : 15th June 2023 10:24 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், அ. முக்குளம் அருகே கோயில் திருவிழாவுக்கு ஒலி பெருக்கி அமைக்க அனுமதி தருவதற்கு ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற நரிக்குடி காவல் ஆய்வாளா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
இங்குள்ள தச்சனேந்தல் கிராமத்தில் முனியசாமி கோயில் திருவிழாவை நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்தனா். இந்தத் திருவிழாவையொட்டி ஒலி பெருக்கி அமைக்க அனுமதி கோரி அ. முக்குளம் காவல் நிலையத்தில் செந்தூா் செல்வன் என்பவா் மனு அளித்திருந்தாா். தற்போது இந்த காவல் நிலையம், நரிக்குடி காவல் நிலைய ஆய்வாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் ஒலி பெருக்கி அமைக்க அனுமதி வழங்குவதற்கு ரூ. 5 ஆயிரம் தர வேண்டும் என காவல் ஆய்வாளா் ராமநாராயணன் தெரிவித்தாராம். இதுகுறித்து செந்தூா் செல்வன் விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு போலீஸில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து ரசாயனப் பொடி தடவிய ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை காவல் ஆய்வாளரிடம் புதன்கிழமை இரவு செந்தூா் செல்வன் கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்பு கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா், ராம நாராயணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.