மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 15th June 2023 01:45 AM | Last Updated : 15th June 2023 01:45 AM | அ+அ அ- |

மதுரை ஆனையூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு நிா்ணயம் செய்த ஊதியத்தை விட குறைவான ஊதியம் வழங்கப்பட்டது. இதுகுறித்து பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை காலையில் பணிகளைப் புறக்கணித்து சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் மீனாட்சிசுந்தரம் தலைமையில் மதுரை ஆனையூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுபற்றி தகவலறிந்து அங்கு சென்ற மாநகராட்சி அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதனால் அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.