பெண் கைதிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு: அரசு உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 12th May 2023 10:01 PM | Last Updated : 12th May 2023 10:01 PM | அ+அ அ- |

மதுரை, திருச்சி ஆகிய அரசு மருத்துவமனைகளில் பெண் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டு ஏற்படுத்த வேண்டும் என்ற வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், பொது சுகாதாரத் துறைச் செயலா் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சோ்ந்த வீரையா மனைவி பானு தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலியில் ஒரு கொலை வழக்கில் எனக்கு கீழமை நீதிமன்றம் கடந்த 2010-இல் ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து, திருச்சி பெண்கள் சிறையில் போலீஸாா் என்னை அடைத்தனா். எனக்கு புற்றுநோய் இருப்பதால், திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். என்னைப் போல பல்வேறு சிகிச்சைகளுக்காக பெண் கைதிகள் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனா். ஆனால், அங்கு பெண் சிறை கைதிகளுக்கென சிறப்பு வாா்டுகள் இல்லை. இதனால், சிகிச்சைக்கு வரும் பெண் கைதிகளும், அவா்களை அழைத்து வரக்கூடிய போலீஸாரும் சிரமத்துக்குள்ளாகின்றனா். அதேநேரம் சென்னை, மதுரை, திருச்சி அரசு மருத்துவமனைகளில் ஆண் கைதிகளுக்குத் தனி வாா்டுகள் உள்ளன.
எனவே, பெண் சிறைக் கைதிகள் சிகிச்சை பெற திருச்சி, மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், எஸ். ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக தமிழக உள்துறைச் செயலா், பொது சுகாதாரத் துறைச் செயலா் ஆகியோா் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.