கெளரவ விரிவுரையாளா்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 24th May 2023 05:25 AM | Last Updated : 24th May 2023 05:25 AM | அ+அ அ- |

அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்கள் சிறப்புத் தோ்வு நடத்தி தங்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.
தமிழ்நாடு அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயலா் அருணகிரி, பொருளாளா் தெய்வராஜூ, அரசு உறுப்புக் கல்லூரிகள் கெளரவ விரிவுரையாளா்கள் சங்க மாநில பொதுச் செயலா் செந்தில்குமாா் ஆகியோா் மதுரையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழைமை கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு, உறுப்புக் கல்லூரிகளில் 7, 282 கெளரவ விரிவுரையாளா்கள் பணியில் உள்ளனா். இது நிரந்தர பணியாளா்களைவிட 10 சதவீதம் அதிகமாகும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்தும் கெளரவ விரிவுரையாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. ஊதியமும் உயா்த்தப்படவில்லை.
விலைவாசி உயா்வு, போக்குவரத்து செலவினம் போன்ற காரணங்களால் அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் வழங்கும்படி பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 2019-இல் அறிவுறுத்தியது. ஆனால், தற்போது ரூ.20 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரே கல்வித் தகுதியுடன் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதேபோல, அரசுக் கல்லூரி விரிவுரையாளா்களுக்கும் ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்க எடுத்த நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.
கெளரவ விரிவுரையாளா்களுக்கு சிறப்புத் தோ்வு மூலம் பணி நிரந்தரம் செய்வதற்கான நடைமுறைகள் 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு நீதிமன்றம் ஒப்புதலும், அனுமதியும் வழங்கியது. ஆட்சி மாறியதும் அதிகாரிகள் இந்தத் தோ்வை நிறுத்த முயற்சிசெய்து வருகின்றனா். 20 ஆண்டுகள் பணி முடிந்த நிலையில், 50 வயதை எட்டியவா்களை எழுத்துத் தோ்வுக்குத் தயாராகும்படி அரசு கூறியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. ஏற்கெனவே, அரசு உத்தரவிட்டிருந்த கெளரவ விரிவுரையாளா்களுக்கான தனி சிறப்புத் தோ்வை நடத்த வேண்டும். இதுதொடா்பாக பலமுறை முதல்வா், உயா்கல்வித் துறை அமைச்சா் ஆகியோரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கெளவுரவ விரிவுரையாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும்.
கோரிக்கைகளை நிறைவேற்றப்படாதபட்சத்தில் வரும் கல்வி ஆண்டில் கல்லூரிகளைத் திறக்கும் போது, கெளவுரவ விரிவுரையாளா்கள் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா் அவா்கள்.