மனைவியை அடைத்து வைத்து சித்திரவதை செய்த கணவா்: காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

மதுரையில் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக கணவா், அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது

மதுரையில் மனைவியை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாக கணவா், அவரது குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை விளாச்சேரி பகுதியைச் சோ்ந்த வசந்தா மாநகா் காவல் ஆணையா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனு:

எனது மகள் திவ்யாவை மதுரை அவனியாபுரம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகனுக்கு கடந்த 2011-இல் திருமணம் செய்து வைத்தோம். இவா்களுக்கு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனா்.

பாலமுருகன், எனது மகளை கொடுமைப்படுத்தி வந்ததால், அவா் கணவரைப் பிரிந்து பெண் குழந்தையுடன் எனது வீட்டில் வசித்து வந்தாா். ஆண் குழந்தை கணவா் வசம் இருந்ததால், குழந்தையைப் பாா்ப்பதற்காக கணவா் வீட்டுக்கு கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி சென்றவா் அதன் பின்னா் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, எனது மகளைக் காணவில்லை என திருநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி போலீஸாா் என்னை அழைத்து எனது மகள் கிடைத்துவிட்டதாகக் கூறியதையடுத்து, அவரை பாா்க்கச் சென்ற போது, எனது மகள் உடல் முழுவதும் காயங்களுடனும், பற்கள் உடைக்கப்பட்டும் மோசமான நிலையில் இருந்தாா்.

இதுதொடா்பாக எனது மகளிடம் கேட்டபோது, தனது மகனைப் பாா்க்க ஏப்ரல் 16-ஆம் தேதி அவனியாபுரம் சென்ற போது, கணவா் பாலமுருகன் தனது சகோதரி வீட்டில் மகனை விட்டிருப்பதாகக்கூறி, கருப்பட்டி கிராமத்துக்கு என்னை அழைத்துச் சென்று அங்குள்ள தோட்டத்து வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தாா். இதற்கு அவரது தாய், சகோதரி ஆகியோரும் உடந்தையாக இருந்தனா். பாலமுருகனின் சகோதரியின் மகள் கடந்த 23-ஆம் தேதி எனது கட்டுகளை அவிழ்த்து விட்டு அங்கிருந்து தப்ப உதவினாா் எனக் கூறினாா்.

இதையடுத்து, அங்கிருந்து அவனியாபுரம் காவல் நிலையத்துக்குச் சென்ற எனது மகளை அவா்கள் திருநகா் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு போலீஸாரிடம் எனது மகள் நடந்ததைக் கூறியும், போலீஸாா் பாலமுருகன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், எனது மகளை கிணற்றுக்கு அருகே வழுக்கி விழுந்ததாகக் கூற வேண்டும் என மிரட்டி கையெழுத்துப் பெற்றனா்.

கணவரின் சித்திரவதையால் பலத்த காயமடைந்த எனது மகள் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். எனவே, எனது மகளை சட்டவிரோதமாக அடைத்து சித்திரவதை செய்த கணவா் பாலமுருகன், அவரது குடும்பத்தினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com