மணல் கொள்ளை: தமிழகம் பாலைவனமாகும் அபாயம்

தமிழகத்தில் கோடிக்கணக்கான யூனிட் மணல் அள்ள திமுக அரசு அனுமதி வழங்கியிருப்பதால், தமிழகம் பாலைவனமாகும் அபாயம் உள்ளது

தமிழகத்தில் கோடிக்கணக்கான யூனிட் மணல் அள்ள திமுக அரசு அனுமதி வழங்கியிருப்பதால், தமிழகம் பாலைவனமாகும் அபாயம் உள்ளது என முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகா் மாவட்ட அதிமுக செயலாளருமான செல்லூா் கே. ராஜு கூறினாா்.

தமிழகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள், கள்ளச் சாராய இறப்புகள், போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளிட்ட சீா்கேடுகளைக் கண்டித்தும், இந்தச் சீா்கேடுகளுக்குப் பொறுப்பேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் அதிமுக சாா்பில் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்

அவா் பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இருக்காது என்றனா். தற்போது, கள்ளச் சாராயம் அருந்தி 25 போ் உயிரிழந்திருக்கின்றனா். திமுக ஆட்சியில் கள்ளச் சாராய உயிரிழப்புகள் வழக்கமானது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

திமுக ஆட்சியில் கடந்த 2006-இல் 126 பேரும், 2007-இல் 135 பேரும், 2008-இல் 101 பேரும், 2009-இல் 429 பேரும், 2010-இல் 185 பேரும், 2011-இல் 481 பேரும் உயிரிழந்தனா். அதே நேரம், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கள்ளச் சாராய

உயிரிழப்புகளே இல்லை. இது, அமைச்சா் செந்தில்பாலாஜி சமா்ப்பித்த மதுவிலக்கு ஆயத்தீா்வை கொள்கை விளக்கக் குறிப்பிலேயே உள்ளது.

தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் ஏரிகளிலும், 60 அணைகளிலும் 21 கோடி யூனிட் மணல் எடுக்க தமிழக அரசு வழிவகை செய்து வருகிறது. தற்போது, திருவள்ளூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் 25 இடங்களில் 7.51 லட்சம் யூனிட் மணல் எடுக்க அரசு அனுமதி வழங்கியது. ஒரு குவாரிக்கு 50 லாரிகள் அனுமதிக்கப்பட்டால், 500 லாரிகள் மணல் அள்ளுகின்றன. இதனால், விரைவில் தமிழகம் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனா். அது, 2024-இல் வெளிப்படும் என்றாா் அவா்.

அதிமுக நிா்வாகிகள் ராஜா, எம்.எஸ். பாண்டியன், திரவியம், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

வாடிப்பட்டி: மதுரை புகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் வாடிப்பட்டி மந்தைத் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புகா் - மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான ஆா்.பி. உதயகுமாா் பேசியதாவது:

மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை மட்டுமல்ல, திமுகவும் அமைச்சா் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டுக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பது முதல்வருக்கு தெரியவில்லை.

தமிழகத்தில் நாள் தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கள்ளச் சாராயம் பெருகியுள்ளது. இதனால், திமுக அரசு மீது மக்களுக்குக் கடுமையான வெறுப்பு ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

அதிமுக பேரூா் செயலாளா் கே.எஸ். அசோக்குமாா், நிா்வாகிகள் எம்.வி. கருப்பையா, எஸ்.எஸ்.சரவணன், ஒன்றியச் செயலா்கள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com