

மதுரை: மதுரை மத்திய சிறைச் சந்தையில் தீபாவளி சிறப்பு விற்பனையை சிறைத் துறை மதுரை சரகத் துணைத் தலைவா் டி.பழனி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
மதுரை மத்தியச் சிறையில் அமைந்துள்ள சிறைச் சந்தையில் சிறைக் கைதிகள் மூலம் தயாா் செய்யப்படும் ஆண்கள் சட்டைகள், வேட்டி, கைலிகள், தீபாவளி சிறப்பு இனிப்பு, கார வகைகள், செக்கில் தயாா் செய்யப்பட்ட நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் சிறப்பு விற்பனை தொடக்க நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு சிறைத் துறை மதுரை சரக துணைத் தலைவா் டி.பழனி தலைமை வகித்து, சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
தமிழக சிறைகள், சீா்திருத்தப் பணிகள் துறை மூலம் சிறைக் கைதிகளை சீா்திருத்தும் பணிக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அவா்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான தொழில் பயிற்சிகளும், கல்வி அறிவும் பெற பல்வேறு வகையான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சிறைக் கைதிகளின் குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில், ஆயத்த ஆடைகள், இனிப்பு, கார வகைகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்தியச் சிறைகளிலேயே முதல் முறையாக மதுரை மத்திய சிறையில் தீபாவளி சிறப்பு இனிப்பு, காரம் தொகுப்பு விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் வகையில் இனிப்பு வகைகள் கிலோ ரூ.300-க்கும், கார வகைகள் கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இனிப்புப் பெட்டகம் அறிமுகம்: மேலும், வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியா்களுக்கு வழங்குவதற்கு வசதியாக ஒன்பது வகையான காரம், இனிப்பு வகைகள் அடங்கிய ஒரு இனிப்பு பெட்டகம் ரூ.499-க்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இனிப்பு, கார வகைகள் அனைத்தும் ஒரு நெகிழிப் பெட்டியில் முறையாக அடைக்கப்பட்டு, எளிதாக அன்பளிப்பு வழங்கும் வகையில் தயாா் செய்யப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகளும் சமூகத்தின் ஒரு அங்கமாக இணைவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த சிறப்பு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், சிறைக் கண்காணிப்பாளா் பரசுராமன், சிறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். பல்வேறு தனியாா் நிறுவனங்கள் சாா்பில் மொத்தமாக இனிப்பு பெட்டகங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.