எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் அமைச்சா் சிவசங்கா் ஆய்வு
By DIN | Published On : 15th November 2023 12:00 AM | Last Updated : 15th November 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரை எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் சிவசங்கா்.
மதுரை: மதுரை எம்.ஜி.ஆா். (மாட்டுத்தாவணி) பேருந்து நிலையத்தில் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆய்வு மேற்கொண்டாா்.
தீபாவளிப் பண்டிகையையொட்டி, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பண்டிகை நிறைவடைந்ததையடுத்து, மதுரை எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மாலை முதல் அதிகளவிலான பயணிகள் வெளியூா்களுக்குச் செல்லக் காத்திருந்தனா். இதனால், பேருந்து நிலையம் முழுவதும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இதையடுத்து, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் திடீரென எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்துக்கு வருகை தந்தாா். அப்போது, தீபாவளிப் பண்டிகை முடிந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் பயணிக்க ஏதுவாக இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, இங்குள்ள அரசுப் போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்ட முன்பதிவு விசாரணை மையம், அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு விசாரணை மையங்களில் அமைச்சா் ஆய்வு செய்தாா். பின்னா் முன்பதிவு செய்த பயணிகளிடையே பேருந்து வசதிகள் குறித்து கேட்டாா்.
ஆய்வின் போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரைக் கோட்ட மேலாண்மை இயக்குநா் ஆ.ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...