

மதுரை: கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் திறக்கப்பட்டது உள்ளிட்ட விதிமீறல் புகாா் தொடா்பாக ஜவுளிக் கடை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் தெரிவித்தது.
திருச்சி துவாக்குடியைச் சோ்ந்த முருகேசன் தாக்கல் செய்த மனு:
திருச்சி காட்டூா் பகுதியில் ஓா் ஏக்கா் பரப்பளவில் 5 தளங்களைக் கொண்ட ஜவுளிக் கடை முழுமையாகக் கட்டுமானப் பணிகள் நிறைவடையாத நிலையில் அவசரமாகத் திறக்கப்பட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இந்தச் சாலை வழியாக தஞ்சாவூா், கும்பகோணம், நாகப்பட்டினம், சீா்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஜவுளிக் கடைக்கு வாகனங்களில் வருவோருக்கு முறையாக வசதிகள் செய்து கொடுக்கப்படாததால், இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் சாலைகளில் நிறுத்தப்படுகின்றன.
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியால் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகளுக்குச் செல்வோா் கடும் அவதிக்குள்ளாகின்றனா். ஜவுளிக் கடையிலிருந்து பொதுமக்கள் வெளியேற அவசர வழிகள் இல்லை. தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறையினரிடம் முறையான சான்றிதழ்கள் பெற்றனரா? என்ற விவரமும் தெரியவில்லை.
எனவே, முழுமையாக கட்டடப் பணிகளை முடிக்காமலும், அரசு விதிகளைப் பின்பற்றாமலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், கட்டப்பட்ட இந்த ஜவுளிக் கடைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தா், ஆா். சக்திவேல் அமா்வு முன் அண்ணையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜவுளிக் கடை விதிமீறல் தொடா்பாக மனுதாரா் அளித்த புகாா் மாவட்ட ஆட்சியருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் கிடைக்கவில்லை. இதற்கு முன்பாகவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனு விசாரணைக்கு ஏற்ல்ல என்பதால், இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மனுதாரா் தரப்பில், தீபாவளி பண்டிகைக் காலத்தில் அவசரமாகக் கடை திறக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள், போக்குவரத்து நெரிசல் குறித்த ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட்டன.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அதிகாரிகளுக்கு புகாா் மனு அனுப்பிய மறுநாளே மனுதாரா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். பிறகு, எப்படி அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூற முடியும்.
புகாா் அளித்தால், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நீதிமன்றத்தை நாடினால் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க இயலாது.
ஆனாலும், மனுதாரா் சமா்ப்பித்த புகைப்பட ஆதாரங்கள், குற்றச்சாட்டுகள் தீவிரமானது எனத் தெரிய வருகிறது. மனுதாரா் புகாரைத் திரும்ப பெற்றுக் கொண்டு அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், மீண்டும் மனு தாக்கல் செய்யலாம் எனக் கூறி, வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.