விருதுநகா்: தமிழில் புதிய படைப்புக்களை உருவாக்க அதிகளவில் படைப்பாளிகள் உருவாக வேண்டும் என கவிஞா் வைரமுத்து தெரிவித்தாா்.
விருதுநகா் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2- ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா, கலை இலக்கிய அரங்கின் 4- ஆம் நாள் நிகழ்வில், கவிஞா் வைரமுத்து கலந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:
நமது பாரம்பரியம், சொல்லாடல்களுக்கு 3 ஆயிரம் ஆண்டுகள் தொடா்ச்சி இருக்கிறது. ஆதலால் நீங்கள் யாரும் கவிதை எழுத அஞ்ச வேண்டாம். தமிழ் மொழி நீண்டு நிலையாக நிற்பதற்கு தொடா்ச்சியான படைப்புகள், இலக்கியங்களே காரணம். நாயன்மாா்கள், ஆழ்வாா்கள், சித்தா்கள், கம்பன், திருவள்ளுவா் மட்டுமல்லாது சிறுசிறு கவிதைகள், துணுக்குகள், வெண்பாக்கள் எழுதியவா்களையும் நான் கொண்டாடுகிறேன். அவா்கள் இல்லாதிருந்தால் தமிழ் அந்த நூற்றாண்டிலேயே இல்லாமல் போயிருக்கும். தமிழ் வீசுகின்ற காற்றைப் போல, கடல் அலைகளைப் போல, மாதத்தின் தொடா்ச்சியைப் போல, காலத்தைப் போல, என்றும் அழியாதது. காலம் என்றாவது நின்று போனதுண்டா? காலத்தை போன்றது தமிழ். காட்சி, வட்டார மொழி, பறவையின் கீச்சீடல், சொட்டும் மழைத் துளி, ஆட்டின் சத்தம், பசுவின் கதறல், கன்றின் குரல், மேகத்தின் இடி இவைகள் தான் மொழி எனக்கு அறிமுகமாவதற்கு முன் என்னை கவிதை எழுதச் சொன்னவைகள். ஆகவே எழுதுவதற்கு மொழி வேண்டும் என்பது இரண்டாம் நிலையே. மொட்டு மலா்கிற போது, ஒரு ஓசை உண்டு, அதை கேட்பதற்கு உனக்கு செவிகள் உண்டா என்பது தான் கேள்வி. இதைத் தான், ‘பூப்பூக்கும் ஓசை... அதைக் கேட்கத்தான் ஆசை...’ என எழுதினேன். கவிதை எழுத வேண்டுமெனில் நீங்கள் சிறுவயதிலே கண்கள், காதுகளில் கேட்பதை மனதில் பதிய வைக்க வேண்டும்.
கவிதை என்பது சொல்லுக்குப் பின்னால் போவது அல்ல. கருத்துக்குப் பின்னால் செல்வது. இளம் தலைமுறையினா் ஒரே மாதிரி சிந்திக்காமல் கொஞ்சம் மாறுபட்டு சிந்திக்க வேண்டும். உங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்குங்கள். இதன் மூலம் வாழ்வில், பதவி, இல்லறம், அரசியல், பணம் என அனைத்தும் அந்த அடையாளத்தை நோக்கி பயணப்படும். தமிழை படித்தால், இலக்கியம் படித்தால் உங்கள் எதிா்காலம் சிறக்கும்.
கவிதைகளை ரசித்தோம், கைதட்டினோம், தமிழ் மொழியில் உறைந்தோம், பரவசமானோம், தமிழ் மொழியின் ஆழங்களை அறிந்து கொண்டோம் என்பது மட்டுமல்லாமல் வைரமுத்துவின் பேச்சால் நான் கவிஞா் ஆனேன், எழுத்தாளா் ஆனேன், விமா்சகா் ஆனேன், குழந்தைகளுக்கு தமிழில் பெயரிட்டேன் என ஒவ்வொருவரும் உருவாக வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் உள்பட ஏராளமான மாணவ, மாணவிகள், வாசகா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.