

விஜயதசமி விழாவையொட்டி, மதுரையில் உள்ள கோயில்களில் அம்பு விடும் நிகழ்வு நடைபெற்றது. மேலும், கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ராஜ ராஜேஸ்வரி, அா்ஜூனனுக்கு பாசுபதம் அருளியது, ஏக பாத மூா்த்தி, கால் மாறி ஆடிய படலம், தபசுக் காட்சி, ஊஞ்சல், சண்டேசுவர அனுக்கிரக மூா்த்தி, மஹிஷாசுரமா்த்தினி, சிவபூஜை உள்ளிட்ட பல்வேறு அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினாா்.
நவராத்திரி விழாவின் 10-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை விஜயதசமியையொட்டி, அம்மனுக்கு சடை அலம்புதல் நிகழ்வு நடைபெற்றது. பின்னா், விழாவுக்காக 10 நாள்கள் சுவாமியுடன் பிரிந்து இருந்த நிலையில், விஜயதசமி விழாவில் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரருடன் சோ்த்தியானாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.
இதேபோல, கூடலழகா் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி, தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விஜயதசமியையொட்டி, வியூக சுந்தரராஜப் பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்வு நடைபெற்றது. விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.
மேலும், மதுரை இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில், பிரளயநாதா் கோயில் ஜெனக நாராயணப் பெருமாள் கோயில், திரௌபதி கோயில், திருவேடகம் ஏடக நாதா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் விஜயதசமி விழாவையொட்டி, அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.