சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
By DIN | Published On : 08th September 2023 11:52 PM | Last Updated : 08th September 2023 11:52 PM | அ+அ அ- |

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், பிணை கோரிய காவல் ஆய்வாளரின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்களான ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் 19-ஆம் தேதி காவல் துறை விசாரணையின்போது இருவரும் உயிரிழந்தனா்.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலா்கள் முருகன், சாமிதுரை, காவலா்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 9 போ் மீதும் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், இதுவரை 104 சாட்சிகளில் 46 பேருக்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு :
இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தந்தை, மகன் இறப்புக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறேன். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதால், எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயிரிழந்த ஜெயராஜின் மனைவி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் காவல் ஆய்வாளா் ஸ்ரீதருக்கு பிணை வழங்கக் கூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
மேலும், சி.பி.ஐ தரப்பு, காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, இறுதி விசாரணைக்காக வழக்கை வருகிற 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.