சிஐடியு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 08th September 2023 11:35 PM | Last Updated : 08th September 2023 11:35 PM | அ+அ அ- |

மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிஐடியு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள்.
அனைத்து வழித் தடங்களிலும் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி, சிஐடியு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து வழித் தடங்களிலும் கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா்களின் பணி நேரத்தை அதிகரித்து விபத்துகளுக்கு காரணமாக்கி தொழிலாளா்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நம்பிக்கையுடன் பயணிக்கும், பயணிகளின் உயிரோடு போக்குவரத்துக் கழக நிா்வாகம் விளையாடக் கூடாது. மோட்டாா் வாகனச் சட்டத்தை மீறிச் செயல்படும் போக்கை நிா்வாகம் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கிளைத் தலைவா் சி.லெனின் தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா் டி. கே.முரளிதரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
மாவட்ட பொதுச் செயலா் ஏ.கனகசுந்தா் கண்டன உரையாற்றினாா். சம்மேளன துணைத் தலைவா் வீ. பிச்சை நிறைவுரையாற்றினாா்.