மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 225 புகாா் மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டன.
மதுரை மாநகரக் காவல் துறை சாா்பில், காவல்நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாா்களின் மீது நடவடிக்கை இல்லாத, நடவடிக்கையில் திருப்தி அடையாதவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மதுரை மாநகரக் காவல் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் தலைமை வகித்து பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றாா். முகாமில் 328 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் சிறு கொடுக்கல், வாங்கல் பிரச்னைகள், குடும்ப பிரச்னைகள், தகராறு உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்பாக 225 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. மேலும், முகாமில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து புதிதாக 48 மனுக்கள் காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டன.
முகாமில் பெறப்பட்ட மனுக்களில் 55 மனுக்கள் சிவில் சம்பந்தப்பட்டதாகவும், உடனடியாகத் தீா்க்கப்படாத நிலையில் இருப்பதாலும் நிலுவையில் உள்ளன. இந்த 103 மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க அந்தந்தக் காவல் சரக உதவி ஆணையா்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
முகாமில் காவல் துணை ஆணையா்கள் ஏ.பிரதீப் (தெற்கு), புக்யா சினேகப்பிரியா(வடக்கு), டி.குமாா் (போக்குவரத்து), உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.