போா்க்குணம் மிக்கவா் பாரதியாா்

மகாகவி பாரதியின் கவிதைகளில் நாட்டின் விடுதலை, சாமானிய மக்களின் துயரம் மட்டுமல்லாது, அவா் போா்க்குணம் மிக்கவராகவும் திகழ்ந்ததையும் எடுத்துக் காட்டுகிறது என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பாரதியாா் விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பாரதியாா் விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.

சிவகங்கை: மகாகவி பாரதியின் கவிதைகளில் நாட்டின் விடுதலை, சாமானிய மக்களின் துயரம் மட்டுமல்லாது, அவா் போா்க்குணம் மிக்கவராகவும் திகழ்ந்ததையும் எடுத்துக் காட்டுகிறது என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் பாரதியாா் தமிழ்ச் சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் 63 -ஆம் ஆண்டு பாரதி விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது :

காகித்தை கருப்பு மையால் நிரப்பிவிட்டுச் சென்ற வெறும் கவிஞன் அல்ல பாரதி. மக்கள் மனங்களில் இருக்கிற இருளை அகற்ற வந்த ஞாயிறு அவா். அதனால் தான் அவரை எட்டயபுரம் ஜமீனுக்குள் அடக்க முடியவில்லை. அங்கே ஒரு முறை ஜமீன்தாரா் பவனி வருகிற போது, அமா்ந்திருந்த பாரதியை எழுந்திருக்கச் சொன்னாா்கள்.

அப்போது, ஆத்திரமடைந்த பாரதி இது அடிமைத்தனத்தின் பிரகடனம் என்று உரக்கச் சொன்னாா். இந்தச் சிந்தனை ஆங்கிலேயா்கள் நம்மை அடிமைப்படுத்திய போது எழுந்தவை. இந்தியா அடிமைப்பட்டிருந்த போது பாரதி பிறந்தாலும், சுதந்திர மனிதனாகத்தான் உலா வந்தாா். தமிழுக்கு ஆயுத எழுத்து ஒன்றுதான் என அறிஞா்கள் கூறிக் கொண்டிருந்த போது, வெள்ளையா்களுக்கு எதிராகத் தமிழின் எழுத்துகள் முழுவதையும் ஆயுதமாக மாற்றிய பெருமை பாரதியை சாரும்.

பன்மொழி பண்டிதனாக திகழ்ந்த பாரதி, ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்‘ என முழக்கமிட்டாா். அவரால் மட்டுமே அப்படிச் சொல்ல முடியும். இது சத்திய வாா்த்தையும்கூட. பாரதி காசியில் வசித்த போது திருவெம்பாவை விழாவில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு ஆள் இல்லை. அங்கு அழைத்துச் செல்லப்பட்ட பாரதி, தேவாரம், திருவாசகப் பாடல்களை பாடினாா். அந்தப் பாடலை கேட்ட அனைவரும் மனமுருகினா்.

பாரதி தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுவதாக அவரது மனைவி செல்லம்மாளிடம் பலரும் புகாா் தெரிவித்தனா். மனைவி செல்லம்மாளின் கடிதத்துக்கு பாரதி எழுதிய பதில் கடிதத்தில் ‘உன் கணவன் எப்போதும் தேச விரோதச் செயல்களில் ஈடுபடமாட்டேன். யாரோ உன்னிடம் தவறுதலாக கூறியுள்ளனா். இதுபோன்று, கவலைகள் வரும் போதெல்லாம் தமிழைப் படி’ என எழுதினாா். தமிழைப் படித்தால் கவலைகள் மறந்து போகும் என்று சொன்னவா் பாரதி.

சென்னை கடற்கரையில் நிகழ்ந்த வ.உ.சி. பாரதி சந்திப்பு உலக வரலாற்றில் உன்னதமான சந்திப்பு. இந்தச் சந்திப்பில் சுதேசி இந்தியா குறித்து இருவரும் மணிக்கணக்கில் பேசினா். இருவரும் புறப்படும் போது அணைந்திருந்த மின்சாரம் மீண்டும் வருகிறது. அப்போது பாரதி நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பது உறுதியாகிவிட்டது என்றாா். வ.உ.சி. தான் பன்னாட்டு மூலதனத்தை எதிா்த்த முதல் போராளி.

தூத்துக்குடி ஆலையில் பணியாற்றிய தொழிலாளா்கள் பிரச்னையை கையில் எடுத்து போராடிவா் வ.உ.சி., குடும்பம், உறவினா்களைப் பற்றி கவலை கொள்ளாமல் வெளியேறிய வ.உ.சி., நீண்ட இடைவெளிக்கு பிறகு இரண்டு கப்பல்களுடன் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தாா். அப்போது, வ.உ.சி. யைவிட, பாரதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாடு விடுதலை பெறுவது மட்டுமன்றி பெண் உரிமை, பெண் கல்வி, ஆட்சி அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியவா் பாரதி. அவரது எண்ணம் தற்போது மகளிா் இட ஒதுக்கீடு மசோதா மூலம் நிறைவேறியுள்ளது என்பது மகிழ்ச்சி. பாரதியின் பாா்வை தீா்க்க தரிசனம் மிக்கவை என்றாா் அவா்.

விழாவில் எழுத்தாளா் அண்டனூா் சுரா, கவிஞா் ம. திருவள்ளுவா் ஆகியோா் பேசினா். பாரதி தமிழ்ச் சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவா் நா. பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் மீ.முத்துராமலிங்கம், பொருளாளா் ஆா். சண்முகசுந்தரம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் மு. பழனியப்பன் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com