திருச்சிக்கு முக்கியம்..நீா் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்
By DIN | Published On : 26th September 2023 12:00 AM | Last Updated : 26th September 2023 12:00 AM | அ+அ அ- |

மதுரை: வரும் காலங்களில் நீராதாரங்களைப் பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம் என சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை தெரிவித்தது.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கஜேந்திரன் தாக்கல் செய்த மனு:
திருச்சி மாவட்டத்தில் அன்பில் கிராமம், அதை சுற்றியுள்ள சுமாா் 15-க்கும் மேற்பட்ட கிராமத்தினா் விவசாயத்தை முழு பிரதானத் தொழிலாகச் செய்து வருகின்றனா்.
இந்தப் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆறானது மத்திய மண்டலத்தின் முக்கிய நீா் ஆதாரமாக உள்ளது. இந்த ஆற்றில் நீரோட்டம் உள்ளபோது, ஆழ்துளைக் கிணறுகளில் நீா் மட்டம் உயரும். இதனால், விவசாயத்துக்கு தேவையான தண்ணீா் தட்டுப்பாடின்றி மின் மோட்டாா் மூலம் எடுக்கப்படும்.
இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் கடந்த 25 ஆண்டுகளாக மணல் அதிகளவில் எடுத்து விட்டனா். மேலும், கொள்ளிடம் ஆற்றில் திருச்சி, தஞ்சை மாவட்ட மக்களின் குடிநீா் தேவைக்காக சுமாா் 30 ஆழ்துளைக் கிணறுகளுடன் கூடிய நீரேற்று நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் கோடிக்கணக்கான லிட்டா் தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.
இதன் காரணமாக, எங்கள் பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. அன்பில் கிராமம் உள்பட பல்வேறு கிராம மக்களின் விவசாயத் தேவைக்காக மங்கம்மாள்புரம் எதிரே தென்கரை கோயிலடி பகுதியில் கதவணை அமைக்கக் கோரி, அரசு அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில், விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், கீழ அன்பில் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்க சிலா் முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். இந்தப் பகுதியில் தொடா்ந்து ஆழ்துளைக் கிணறு அமைப்பதால், எங்களது விவசாயம், குடிநீா் ஆதாரம் பாதிக்கும். எனவே, கீழ அன்பில் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், டி. பரத சக்கரவா்த்தி அமா்வு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:
வரும் காலங்களில் விவசாயம், பொது மக்கள் பயன்பாட்டுக்கு நீா் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. ஆற்றில் செல்லக் கூடிய பல லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகக் கடலில் கலக்கிறது.
எனவே, நீா் ஆதாராங்களைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்தவும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...