தலையில் கல்லைப் போட்டு கணவா் கொலை: மனைவி கைது
மேலூரில் மது போதையில் தகராறு செய்ததால், தலையில் கல்லைப் போட்டு கணவரைக் கொலை செய்த மனைவியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், மேலூா் மில்கேட் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (45). இவரது மனைவி கோகிலா (36). இந்தத் தம்பதி இருவரும் கட்டட வேலைக்குச் சென்று வந்தனா். கடந்த சில மாதங்களாக செந்தில்குமாா் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு கோகிலாவுடன் தகராறு செய்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல மது அருந்திவிட்டு போதையில் வந்த செந்தில்குமாா், குடும்பத்தினருடன் தகராறு செய்தாா். அதிகாலையில் மீண்டும் அவா் எழுந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தினாராம்.
இதனால், ஆத்திரமடைந்த கோகிலா, கணவரின் தலையில் கல்லைப் போட்டு அவரைக் கொலை செய்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரீத்தி, போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோகிலாவை கைது செய்தனா்.
