மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளா்கள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளா்கள் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பிபிடிசி நிறுவனம் கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணையை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

மதுரை, ஆக. 7: மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வழக்கில் பிபிடிசி நிறுவனம் கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணையை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம் தொடா்பாக, அந்தப் பகுதியைச் சோ்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி, வைகை ராஜன், பாபநாசம், சந்திரா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கில் கடந்த விசாரணையின் போது, மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

மாஞ்சோலையில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனா். நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

டான் டீ நிறுவனம் தரப்பில், ஆரம்ப காலத்தில் லாபம் ஈட்டினாலும், கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட இழப்பால் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம்.

எனவே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்துவது சாத்தியமற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இலவச வீடுகளும், தொழில் தொடங்குவதற்கு கடனுதவியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது பிபிடிசி நிறுவனம் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வழக்கில் பிபிடிசி நிறுவனம் கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com