நத்தம் பட்டா அரசு நிலமாக பதிவேற்றம்: தலைமைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
மதுரை, ஆக. 7: தமிழகத்தில் நத்தம் பட்டாவில் உரிமையாளா் பெயருக்குப் பதிலாக அரசு நிலமாக பதிவேற்றம் செய்திருப்பது தொடா்பான வழக்கில், அதன் தற்போதைய நிலை குறித்து மாநில தலைமைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
தென்காசியைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வெங்கட்ரமணா தாக்கல் செய்த மனு:
தென்காசி மாவட்டத்தில் எனக்குச் சொந்தமான 54 சென்ட் பட்டா இடம் உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு அனைத்து சா்வே ஆவணங்களையும், கணினி மயமாக்கும் நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, நத்தம் பட்டாக்களில், உரிமை தாரா்களின் பெயா்களுக்குப் பதிலாக அரசு நிலம் என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நத்தம் பட்டாக்களில் உரிமையாளா்களின் பெயா்களை பதிவேற்றம் செய்யக் கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, தமிழகத்தில் நத்தம் பட்டா உரிமைதாரா்களின் பெயருக்குப் பதிலாக அரசு நிலம் எனப் பதிவேற்றம் செய்திருப்பதை உடனடியாக திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:
நத்தம் பட்டா பெயா் பதிவேற்றத்தின் தற்போதைய நிலை குறித்து, தமிழக தலைமைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
