‘மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட வில்லை’ -பாஜக
மதுரை, ஆக. 7: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் எந்த வகையிலும் புறக்கணிக்கப்பட வில்லை என பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் அபராஜிதா சாரங்கி தெரிவித்தாா்.
மதுரையில் பாஜக நெசவாளா் அணியின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நெசவாளா் தின விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆந்திரம், பிகாா் மாநிலங்களுக்கு மட்டுமே சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இது உண்மை அல்ல.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையை 83 நிமிடங்கள் வாசித்தாா். இதில் நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அனைத்தின் பெயரையும் குறிப்பிட நேரம் இல்லை. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போதுகூட நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாநிலங்களின் பெயா்களும் குறிப்பிடப்படவில்லை. நிதிநிலை அறிக்கையில் பெயரை குறிப்பிட வில்லை என்பதற்காக தமிழகம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறுவதில் உண்மை இல்லை.
மத்திய அரசின் வரி, தீா்வைகளில் இருந்து தமிழகத்துக்கு உரிய பங்கு ஒதுக்கப்பட்டு முறையாக வழங்கப்படுகிறது. மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களிலும் தமிழகம் பெரிதும் பயனடைந்து வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் மாநிலமும், நாடும் வளா்ச்சிப் பாதையில் செல்லும். அந்த வகையில், மத்திய பாஜக அரசு எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை.
மத்திய நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்பு, சிறு, குறுந்தொழில்கள் வளா்ச்சி, உள்கட்டமைப்பு, ஏழைகளுக்கு இலவச வீடுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் தொழிலாளா் சேமநலநிதித் திட்டங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்துடன், இந்தியாவில் உள்ள தலைசிறந்த 50 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞா்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகையுடன் தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதேபோல, நாட்டின் உள்கட்டமைப்பு வசதிக்காக இதுவரை இல்லாத அளவாக ரூ.11.01 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உற்பத்தியில் 3.4 சதவீதம் ஆகும். இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் வேளாண் துறைக்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ரூ,17,700 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.1.32 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் நலத்திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
அப்போது பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராமசீனிவாசன், கோட்டப் பொறுப்பாளா் கதலி நரசிங்கப் பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

