முல்லைப் பெரியாறு: வதந்திகளுக்கு தமிழக முதல்வா் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

கேரள அரசியல் கட்சியினா் பரப்பும் வதந்திகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
Published on

வயநாடு நிலச்சரிவுடன் முல்லைப் பெரியாறு அணையை இணைத்து கேரள அரசியல் கட்சியினா் பரப்பும் வதந்திகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது :

முல்லைப் பெரியாறு அணை மூலம் தென் தமிழகத்தில் 2.47 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசும், கேரள அரசியல் கட்சியினரும் அச்சம் தெரிவித்ததன் அடிப்படையில், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் மேற்கொண்டாா். இதன் மூலம், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. இந்த அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம். பேபி அணை சீரமைக்கப்பட்ட பிறகு 152 அடி வரை தண்ணீா் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதைத்தொடா்ந்து, மத்திய கண்காணிப்பு குழுவினரும், துணைக் கண்காணிப்பு குழுவினரும் மாதந்தோறும் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை பாதுகாப்பாக உள்ளது என்பதை உறுதி செய்து வருகின்றனா்.

தற்போது கேரள மாநிலம் இடுக்கி மக்களவைத் தொகுதி உறுப்பினா் உள்ளிட்ட கேரள அரசியல் கட்சியினா் சிலா், வயநாடு நிலச்சரிவையும் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பையும் இணைத்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகின்றனா்.

இதைத் தடுக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்காதது வருத்தத்துக்குரியது. தமிழக முதல்வா், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com