காவல் நிலையங்கள் தனி நீதிமன்றங்களாகச் செயல்படக் கூடாது
மதுரை, ஆக. 14: காவல் நிலையங்கள் தனி நீதிமன்றங்களாகச் செயல்படக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சோ்ந்த அகமது மீது தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கை அவா் ரத்து செய்யக் கோரி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அவா் மனு தாக்கால் செய்தால். இதேபோல, தென் மாவட்டங்களைச் சோ்ந்த மேலும் பலரும் தங்கள் மீது காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா்கள் தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுக்களுடன், முதல் தகவல் அறிக்கை நகலை இணைப்பதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி துணை மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். இதில் துணை மனுக்களை இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் முறையிடலாம். காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றங்களுக்கு ஏன் அனுப்பவில்லை என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கெனவே இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தாக்கல் செய்த அறிக்கையில், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் இருந்த ஆவணங்களுடன், மனுதாரரின் முதல் தகவல் அறிக்கை ஆவணமானது சோ்த்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த முதல் தகவல் அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த பிறகு, விசாரணை நடை முறைகள் குறித்து பல்வேறு சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், விசாரணை நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட முதல் தகவல் அறிக்கை விவரங்களை தாக்கல் செய்ய ஏற்கெனவே உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிமன்றத்துக்கு உள்பட்ட 14 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் எண்ணிக்கை 2,28,859 என விசாரணை நீதிமன்றங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகளின் எண்ணிக்கை 3,03,195 என முரண்பாடான தகவல் உள்ளது.
இவற்றில் 20,336 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் விசாரணை நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படவில்லை. இதன்மூலம், காவல் நிலையங்கள் தனி நீதிமன்றங்களாகவே செயல்படுவதாகத் தெரிகிறது. இந்த நடைமுறை நீதித் துறையின் தனித்தன்மையைப் பாதிக்கும். விசாரணை நீதிமன்றங்களுக்கு முதல் தகவல் அறிக்கை அனுப்பிய விவரம் குறித்து பதிவேடு பாராமரிக்கப்படுகிா என கேள்வி எழுப்பினால், மெளனமே பதிலாக உள்ளது.
தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தனது எதிா் வாக்குமூலத்தில் காவல் நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் இடையிலான முதல் தகவல் அறிக்கைகளில் (எப்ஐஆா்) உள்ள வேறுபாடுகளை மறுபரிசீலனை செய்ய காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் 8 சிறப்பு குழுக்கள் அமைத்திருப்பதாகக் கூறியுள்ளாா்.
சில மாவட்டங்களைச் சோ்ந்த காவல் கண்காணிப்பாளா்கள், வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கையை விசாரணை நீதிமன்றத்துக்கு அனுப்பாத காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். தவறை திருத்துவதும், மீண்டும் தவறு நடைபெறாமல் பாா்த்துக் கொள்வதும் நீதிமன்றத்தின் முக்கியப் பணியாகும்.
காவல் நிலையங்கள் தனி நீதிமன்றங்களாகச் செயல்படக் கூடாது. காவல் நிலையத்தில் பதிவாகும் முதல் தகவல் அறிக்கைக்கும், நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும் முதல் தகவல் அறிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை நவ. 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

