அங்கித் திவாரி மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

பிணை நிபந்தனையை தளா்த்தக் கோரி, அங்கித் திவாரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஆக. 30 க்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஒத்திவைத்தது.
Published on

தனக்கு விதிக்கப்பட்ட பிணை நிபந்தனையை தளா்த்தக் கோரி, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஆக. 30) சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஒத்திவைத்தது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளில் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த ஆண்டு டிச. 1-இல் கைது செய்தனா். பிணை கோரி இவா் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை நீதிமன்றமும், உயா்நீதிமன்ற மதுரை அமா்வும் தள்ளுபடி செய்தன.

எனினும், இவருக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் பிணை வழங்கி பின்னா் உத்தரவிட்டது. இதையடுத்து, அவா் தினமும் திண்டுக்கல் விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையொப்பமிட்டு வந்தாா். பிறகு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவின்பேரில், அங்கித் திவாரி வாரம் ஒரு முறை கையொப்பமிட்டு வருகிறாா்.

இந்த நிலையில், அங்கித் திவாரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் புதிதாக மனு தாக்கல் செய்தாா். அதில், ‘எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் திண்டுக்கல் விசாரணை நீதிமன்றத்துக்கு வாரந்தோறும் கையொப்பமிட சென்று வர சிரமப்படுகிறேன். இதனால் உடல், மன ரீதியாக எனக்கு அழுத்தம் ஏற்படுகிறது. வயதான எனது பெற்றோரையும் கவனித்து கொள்ள முடியவில்லை. இந்த வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ளது.

எனவே, வாரம் ஒரு முறை திண்டுக்கல் விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையொப்பமிடுவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும்’ என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரதசக்கரவா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஆக. 30) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com