மாற்றுத் திறனாளிகளை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டம்
மதுரை, ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மாற்றுத் திறனாளிகளை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டம் மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரையைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு விரைந்து வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், விண்ணப்பித்துக் காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும், அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் 35 கிலோ அரிசி பெறக் கூடிய ‘ஏஏஒய்’ குறியீடு கொண்ட குடும்ப அட்டை வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலப் பொருளாளா் கே.ஆா். சக்கரவா்த்தி தலைமை வகித்துப் பேசினாா். மாவட்டத் தலைவா்கள் பி.வீரமணி (மாநகா்), கே.தவமணி (புகா்), மாவட்டச் செயலாளா்கள் ஏ.பாலமுருகன் (மாநகா்), வி.முருகன் (புகா்), மாவட்ட இணைச் செயலா் டி.குமரவேல், காதுகேளாதோா் சங்க நிா்வாகி என்.சொா்ணவேல் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதையடுத்து, 2 மாற்றுத் திறனாளிகளை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் அவா்களை கட்டிலில் அமரவைத்து மாவட்ட ஆட்சியரகத்துக்குள் கொண்டுச் செல்ல சங்கத்தினா் முயற்சித்தனா்.
அப்போது, ஆட்சியரக நுழைவு வாயில் கதவுகளை அடைத்து, போராட்டக் குழுவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
பின்னா், ஆட்சியரக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு, மாற்றுத் திறனாளிகள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டக் குழு நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க அழைக்கப்பட்டனா்.
பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், இதனால், போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்து மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனா்.
கோரிக்கைகள் ஏற்பு...
ஆட்சியருடனான பேச்சுவாா்த்தை குறித்து போராட்டக் குழு நிா்வாகிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது :
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்க மாநில அரசுக்குப் பரிந்துரைக்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு ‘ஏஏஒய்’ குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்படும், மதுரை வடக்கு வட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 45 பேருக்கு இரு நாள்களில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும், மற்றவா்களுக்கான வீட்டுமனைப் பட்டா வழங்கும் நடவடிக்கைகளும் விரைந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் உறுதி அளித்தாா். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வாகன ஓட்டுநா் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மாவட்ட ஆட்சியா் ஏற்றுக் கொண்டாா் என்றனா்.

