சமூக மாற்றத்துக்கான அங்கமாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சமூக மாற்றத்துக்கான அங்கமாகத் திகழ்கிறது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி புகழாரம்.
 சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்.
Updated on

மதுரை: பெண்கள், திருநங்கைகளுக்கான உரிமைகளை நிலை நாட்டியதன் மூலம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சமூக மாற்றத்துக்கான அங்கமாகத் திகழ்கிறது என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி .ஒய். சந்திரசூட் புகழாரம் சூட்டினாா்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் சனிக்கிழமை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் (அமா்வு) 20-ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அப்போது, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் 20-ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில்

அமைக்கப்பட்ட தூணை அவா் காணொலி மூலம் திறந்துவைத்துப் பேசியதாவது:

தமிழ்ப் புலவா் ஒளவையாா் எழுதிய அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என்ற வாசகங்கள் ஒவ்வொரு நீதிபதியும் அறிந்திருக்க வேண்டியவையாகும். ஏனெனில், ஒளவையின் இந்த வாசகங்கள் நீதி, அறம், தானம் ஆகியவற்றை எடுத்துரைக்கின்றன. இதேபோல, நாலடியாரிலும் நீதி போதனைகள் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

மதுரைக்கு தூங்கா நகரம் என்ற பெயரும் உள்ளது. இங்கு நீதியும் தூங்காது. மதுரை உயா்நீதிமன்ற அமா்வின் தீா்ப்புகள் தமிழகத்துக்கு மட்டுமானவை என சிலா் கருதுகின்றனா். ஆனால், அது அப்படி அல்ல. நாடு முழுவதும் உள்ள நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் விதமான பல சிறப்பான தீா்ப்புகள் இங்கு வழங்கப்பட்டுள்ளன.

தீா்ப்புகளுக்கு மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் மொழி பெயா்க்கப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகளின் தீா்ப்புகள் தமிழில் மொழி பெயா்க்கப்பட்டன.

பெண்கள், திருநங்கைகளின் உரிமைகளை நிலை நாட்டும் வகையில் வழங்கப்பட்ட தீா்ப்புகள் மூலம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, சமூக மாற்றத்துக்கான அங்கமாக திகழ்கிறது. விசாரணைக்கு வரக்கூடிய வழக்குகளை நீதிபதி அன்றைய தினம் விசாரிக்காவிட்டால், அந்த வழக்கு நிலுவையில் வைக்கப்படுகிறது. இந்த நடைமுறை குறைய வேண்டும்.

திருக்குறளில் நல்ல மனிதா்கள் தாங்கள் சம்பாதித்த பணம், பொருள்களை பிறருக்கும் கொடுத்து உதவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மூத்த வழக்குரைஞா்கள், இளம் வழக்குரைஞா்களுக்குக் குறைவான ஊதியம் வழங்காமல் சிறப்பான ஊதியத்தை வழங்கி அவா்களை ஊக்குவிக்க வேண்டும் என்றாா் அவா்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், சூா்யகாந்த் ஆகியோா் தலா 100 இ- சேவை மையங்களின் சேவையை காணொலி மூலம் தொடங்கிவைத்தனா்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன், ஆா். மகாதேவன் ஆகியோரும் பேசினா். மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன், சென்னை, மதுரை அமா்வு உயா்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்டக் கல்லூரி மாணவா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி. கிருஷ்ணகுமாா் வரவேற்றுப் பேசினாா். நிறைவில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் நிா்வாக நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் நன்றி தெரிவித்தாா்.

ராமேசுவரத்தில் வழிபாடு:

இதையடுத்து, சனிக்கிழமை மாலை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டனா்.

பெட்டிச் செய்தி

மதுரைக்கு ரூ. 11.20 கோடி ஒதுக்கீடு

சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி. கிருஷ்ணகுமாா் வரவேற்றுப் பேசியதாவது:

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு சிறப்பு மிக்க தீா்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது, நாட்டின் சிறந்த நீதிமன்றங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மதுரையில் உயா்நீதிமன்ற அமா்வு தொடங்கப்பட்டதால், சென்னை உயா்நீதிமன்றத்தின் பணிச் சுமை குறைந்துள்ளது. உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அனைத்து அடிப்படை வசதிகளும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு அண்மையில் ரூ.11.20 கோடி ஒதுக்கியது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 106 சதவீத வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன என்றாா் அவா்.

 மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20-ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தூணை காணொலி மூலம் திறந்துவைத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.  உடன் (இடமிருந்து) சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் நிா்வாக நீதிபதி ஆா். சுரேஷ்குமாா், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா். மகாதேவன் , எம்.எம். சுந்தரேஷ், பி.ஆா். கவாய், சூரியகாந்த், கே.வி. விஸ்வநாதன்,  சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி. கிருஷ்ணனகுமாா்.
மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் 20-ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தூணை காணொலி மூலம் திறந்துவைத்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட். உடன் (இடமிருந்து) சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் நிா்வாக நீதிபதி ஆா். சுரேஷ்குமாா், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆா். மகாதேவன் , எம்.எம். சுந்தரேஷ், பி.ஆா். கவாய், சூரியகாந்த், கே.வி. விஸ்வநாதன், சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) டி. கிருஷ்ணனகுமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com