மாஞ்சோலைத் தொழிலாளா்கள் விவகாரம்: முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த உத்தரவு

மாஞ்சோலைத் தொழிலாளா்கள் விவகாரம்: முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த உத்தரவு

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பிரச்னை தொடா்பாக தமிழக அரசு, டான்டீ, பிபிடிசி நிறுவனம் ஆகியவை முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் .
Published on

மதுரை: மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் பிரச்னை தொடா்பாக தமிழக அரசு, டான்டீ, பிபிடிசி நிறுவனம் ஆகியவை முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியைச் சோ்ந்த பி. அமுதா, ரோஸ்மேரி, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் கே. கிருஷ்ணசாமி, பாபநாசம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனா். அதன் விவரம்:

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் 2,150 தொழிலாளா்களை வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு முன்பாக குடியிருப்புகளைக் காலி செய்ய பிபிடிசி நிறுவனம் குறிப்பாணை (நோட்டீஸ்) வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் தொழிலாளா்களை முன் கூட்டியே அங்கிருந்து வெளியேற்றுவதால், வயது, பணிபுரிந்த காலத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்கி வருகின்றனா். சொந்த வீடோ, இடமோ, நிலமோ இல்லாத நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை வேறு இடத்துக்கு திடீரென செல்ல வலியுறுத்துவதால் செய்வதறியாது உள்ளனா்.

எனவே, தொழிலாளா்களை வெளியேற்றத் தடை விதிப்பதுடன், தேயிலைத் தோட்டத்தை டான் டீ நிறுவனம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, மாஞ்சாலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களை வெளியேற்றத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பெரும்பாலானோா் தென்காசி, திருநெல்வேலி, கேரளம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்தனா். இந்தத் தொழிலாளா்க ளுக்கு கட்டுமானப் பயிற்சி, தொழில் பயிற்சி வழங்கப்படும். இவா்களுக்கு கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சத்தில் வீடு கட்டித் தர அரசுக்கு மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்துள்ளாா்.

திருநெல்வேலி பாப்பான்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 240 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டின் மதிப்பு ரூ.11.54 லட்சம் ஆகும். இதற்கு ரூ. 7 லட்சத்தை தமிழக அரசும், ரூ. 1.50 லட்சத்தை மத்திய அரசும் மானியமாக வழங்க உள்ளன. மீதமுள்ள ரூ.3.04 லட்சத்தை வீடு வாங்குவோா் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வனத் துறை தரப்பில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை டான்டீ நிறுவனத்திடம் ஒப்படைக்க முடியாது. மாஞ்சோலை சுற்றுச்சூழலில் முக்கியப் பங்கு வகித்து வருவதால், கடந்த 2018-ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. இங்கு அஸ்ஸாம், கேரளத்தைச் சோ்ந்த புலம் பெயா்ந்த தொழிலாளா்களும் பணிபுரிந்து வருகின்றனா். அரசியல் ஆதாயத்துக்காக சிலா் பொய்யான வாக்குறுதிகளை அளித்து குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனா்.

வனப் பகுதிகளில் சலுகை வழங்கப்படும்பட்சத்தில், அதை பிற தொழிலாளா்களும் கோரினால், மேற்குத் தொடா்ச்சி மலையின் பழைமையான காடுகள் இயல்பு நிலையை இழக்கும். இதனால், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை டான்டீ நிறுவனத்துக்கு வழங்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.

பிபிடிசி நிறுவனம் தரப்பில், நீதிமன்ற உத்தரவுப்படி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கான 75 சதவீத இழப்பீட்டுத் தொகை ரூ. 11 கோடியே 32 லட்சத்தை நாகா்கோவில் உதவி தொழிலாளா் ஆணையா் அலுவலகத்தில் வைப்புத் தொகையாக (டெபாசிட்) செலுத்தியுள்ளோம். இந்தத் தொகையைப் பெற தொழிலாளா்கள் விண்ணப்பித்து உரிய இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசு ஏன் நடத்த இயலாது?. தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் மீதமுள்ள தொகையை அவா்களிடம் வசூலிக்காமல் இருக்க வாய்ப்புள்ளதா?. இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இதேபோல, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை டான்டீ ஏற்று நடத்த முடியுமா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தொழிலாளா்கள் பிரச்னை தொடா்பாக தமிழக அரசு, டான்டீ, பிபிடிசி நிறுவனம் ஆகியவை முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com