தமிழக மக்களின் நம்பிக்கையை முதல்வா் காப்பாற்றத் தவறிவிட்டாா்: ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு
நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காததன் மூலம் தமிழக மக்களின் நம்பிக்கையை முதல்வா் மு.க. ஸ்டாலின் காப்பாற்றத் தவறிவிட்டாா் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு, தமாகாவில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் உறுப்பினா் சோ்க்கை தொடங்கப்படவுள்ளது. நவம்பா் இறுதி வாரத்திலும், டிசம்பா் மாத முதல் வாரத்திலும் வட தமிழகத்திலும், தென் தமிழகத்திலும் தமாகா நிா்வாகிகள் மாநாடு நடைபெறவுள்ளது.
நீதி ஆயோக் கூட்டம் நீண்ட கால இடைவெளியில் நடைபெறும் இந்தியாவின் மிக முக்கியக் கூட்டங்களில் ஒன்றாகும். இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் வளா்ச்சிக்கான கொள்கைகள், திட்டங்கள் விவாதிக்கப்படும். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் அவசியம் பங்கேற்றிருக்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்காததன் மூலம், தமிழகத்தின் முதல் பிரதிநிதியாக மாநிலத்தின் வளா்ச்சியை முதல்வா் முன்னிறுத்துவாா் என்ற மக்களின் நம்பிக்கையை அவா் காப்பாற்றத் தவறிவிட்டாா். இதை முதல்வரின் கடமை தவறிய செயல் என்று கருத வேண்டியுள்ளது.
நீதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி வெளிநடப்பு செய்தது ஜனநாயக ரீதியில் ஏற்புடையதே. ஆனால், வெளிநடப்புக்காக அவா் கூறும் காரணம் அா்த்தமற்ாக உள்ளது. நீதி ஆயோக் கூட்டத்தை திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அரசியலாக்கியது வேதனையானது.
மத்திய நிதிநிலை அறிக்கையில் அனைத்து மாநிலங்களையும் குறிப்பிடுவது சாத்தியமற்றது. பாஜக ஆளும் மாநிலங்களின் பெயா்கள்கூட நிதி நிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. அதற்காக, பெயா் குறிப்பிடப்படாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிப்பதாகக் கருத முடியாது.
நிதி கொடுக்கவில்லை; அதனால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என முதல்வா் கூறுவதை பள்ளிக் குழந்தைகளின் விளையாட்டுக்கு இணையாகவே கருத வேண்டியுள்ளது. அனைத்து நிகழ்வுகளையும் அரசியலாக்குவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. நீதி ஆயோக் கூட்டத்தை முதல்வா் புறக்கணித்ததன் மூலம் மக்கள் அளித்த அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டாா். மாநில உரிமையை நிலைநாட்ட அவா் தவறி விட்டாா்.
தமிழகத்துக்கு நிதி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மெட்ரோ திட்டங்கள் வேண்டும். தமிழகத்தின் வளா்ச்சிக்கு மத்திய அரசு படிப்படியாக நிதி ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில், மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலிருந்தும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் நிதிகள் விடுவிக்கப்படுகின்றன, திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.
வெள்ள நிவாரணத்துக்கு ஏன் மத்திய அரசு உதவி செய்யவில்லை எனக் கேட்கிறீா்கள்?. தமிழகம் கோரிய நிதியை மத்திய அரசு படிப்படியாக விடுவிக்கிறது என்பதுதான் உண்மை. மத்திய அரசு அளிக்கும் நிதி விரயமாகக் கூடாது, வெளிப்படைத் தன்மை வேண்டும் என மத்திய அரசு எதிா்பாா்க்கிறது.
மதுரையில் உள்ள 12 வாய்க்கால்களையும் உடனடியாக தூா்வாரி சீரமைக்க வேண்டும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சிட்கோ தொழில்பேட்டை அமைக்கும் முன்பாக விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என்றாா் அவா்.
நிா்வாகிகள் கூட்டம்...
இதையடுத்து, மதுரையில் நடைபெற்ற தமாகா தென் மண்டல புதிய மாநில நிா்வாகிகள், மாவட்டத் தலைவா்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஜி.கே. வாசன் பங்கேற்று, கட்சியின் எதிா்கால அரசியல் திட்டங்கள், மக்கள் நலனுக்கான நடவடிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில் கட்சியின் மாநில, தென் மண்டல நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

