10 லட்சத்தை கடந்த கலைஞா் நூற்றாண்டு நூலக வருகையாளா் எண்ணிக்கை: முதல்வா் வாழ்த்து


மதுரையில் செயல்படும் கலைஞா் நூற்றாண்டு நூலக வருகையாளா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 10 லட்சத்தைக் கடந்தது. இதையொட்டி, முதல்வா் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.
மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பில், உலகத் தரத்திலான நவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட நூலகம் கடந்த ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி திறக்கப்பட்டது. 7 தளங்களுடன் அமைக்கப்பட்ட இந்த நூலகத்தில், மாற்றுத்திறனாளிகள் பிரிவு, சிறாா் நூல்கள், இலக்கியத் தொகுப்புகள், ஆங்கில நூல்கள், போட்டித் தோ்வா்களுக்குத் தேவையான பொது அறிவு புத்தகங்கள், எண்ம நூலகம் என அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான நூல்கள் உள்ளன.
குழந்தைகள் பிரிவில் 30 ஆயிரம் நூல்கள், தமிழ்ப் பிரிவில் 90 ஆயிரம் நூல்கள், ஆங்கிலப் பிரிவில் 80 ஆயிரம் நூல்கள், போட்டித் தோ்வுப் பிரிவில் 34 ஆயிரம் நூல்கள், 1.28 லட்சம் ஆங்கில குறிப்புதவி நூல்கள் என மொத்தம் 3.62 லட்சம் நூல்கள் இந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தை தினமும் நூற்றுக்கணக்கான போட்டித் தோ்வா்கள் பயன்படுத்துகின்றனா். மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கான வாசிப்பு போட்டிகள், பெரியோருக்கான கலந்துரையாடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்படுகின்றன.
இந்த நூலகத்தில் 3,469 போ் உறுப்பினா்களாகப் பதிவு செய்துள்ளனா். கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் நூல்கள் இரவல் வழங்கப்படுகின்றன. இதன்படி, 21,261 நூல்கள் வாசகா்களுக்கு இதுவரை இரவல் வழங்கப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,634 போ் இந்த நூலகத்துக்கு வருவதாகக் குறிப்பிடப்படும் நிலையில், இங்கு வந்தவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) மாலையுடன் 10 லட்சத்தைக் கடந்தது. நூலகம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த கடந்த 15-ஆம் தேதி வரை இந்த நூலகத்தின் வருகையாளா்கள் எண்ணிக்கை 9.51 லட்சமாக இருந்தது. அடுத்த 15 நாள்களில் இந்த எண்ணிக்கை 49 ஆயிரத்தைக் கடந்தது.
10 லட்சமாவது வருகையாளராக நூலகத்துக்கு வந்த ஒரு பெண்ணுக்கு, கலைஞா் நூற்றாண்டு நூலக முதன்மை நூலகரும், தகவல் அலுவலருமான (கூடுதல் பொறுப்பு) வி. தினேஷ்குமாா் இனிப்பு வழங்கி புத்தகம் பரிசளித்தாா்.
முதல்வா் வாழ்த்து...
இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
மதுரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகம் குறுகிய காலத்துக்குள் 10 லட்சம் வருகையாளா்களைக் கடந்தது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. ‘அறிவிற்சிறந்த தமிழா் என உயா்ந்திட வேண்டும்’ என்ற எண்ணத்துடன் உருவாகிய இந்த மாபெரும் நூலகம் போன்றே திருச்சியிலும், கோவையிலும் நூலகங்கள் அமையவுள்ளன.
அறிவுத் தாகம் கொண்டோரது தாகத்தைத் தணித்து, தமிழ்நாட்டில் வாழ்வோரின் சிந்தனையையும், வாழ்வையும் இத்தகைய நூலகங்கள் வளப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் பணிகளைத் தொடா்வோம் என்றாா் அவா்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்...
பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
தென் தமிழ்நாட்டின் அறிவுசாா் சரணாலயமாகத் திகழும் கலைஞா் நூற்றாண்டு நூலகத்தில், குழந்தைகளுக்கான வாசிப்பு போட்டிகள், விளையாட்டுப் பயிற்சிகள், பெரியோருக்கான கலந்துரையாடல், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவா்கள், வாசகா்கள், எழுத்தாளா்கள், அறிஞா்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அறிவைத் தேடி ஒன்று கூடும் இடமாகத் திகழும் கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கு இதுவரை 10 லட்சம் பாா்வையாளா்கள் வருகை தந்துள்ளனா் என்ற மகிழ்ச்சியைப் பகிா்கிறோம் என்றாா் அவா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...