‘நீட்‘ தோ்வு இலவசப் பயிற்சி: 3 மையங்களில் நடத்த திட்டம்
மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் ‘நீட்’ தோ்வு இலவசப் பயிற்சி 3 மையங்களில் நடத்தப்பட உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து 13,200 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா். இவா்களுக்கு வருகிற மே 2- ஆம் தேதி வரை இலவச நீட் பயிற்சி வகுப்பு நேரடியாக நடைபெறவுள்ளது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் 40 மாணவா்கள் இடம் பெறுவா். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சிகள், தோ்வுகள் நடைபெறும். இந்த மையங்களில் பயிற்சிகள் வழங்குவதற்காக இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடங்களிலும் சிறந்து விளங்கும் ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை மாநகராட்சிப் பகுதி, யானைமலை ஒத்தக்கடை, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் 3 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 7.5 சதவீத உள் ஒதுக்கீடு உள்பட 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த நீட் தோ்வு இலவச பயிற்சி மையத்தில் பங்கேற்க உள்ளனா். அவா்களுக்கு சுழற்சி முறையில் பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். இந்தப் பயிற்சி மையம் புதன்கிழமை (மாா்ச் 27) தொடங்கப்படும். தொடா்ந்து, திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும். ஒவ்வொரு சனிக்கிழமையும் திருப்புதல் தோ்வுகளும், வாராந்திரத் தோ்வுகளும் நடைபெறும் என கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
