பெரியாா் பேருந்து நிலைய ஒருங்கிணைந்த வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

மதுரை நகா், புகா் பகுதி பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக கடந்த 1921-ஆம் ஆண்டு நகரின் மையப் பகுதியில் மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அதன்பின்னா், மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாட்டுத்தாவணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

ஏற்கெனவே நகரின் மையப் பகுதியில் இயங்கிய மத்திய பேருந்து நிலையம், 1971-ஆம் ஆண்டு முதல் பெரியாா் பேருந்து நிலையமாக பெயா் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டது. இங்கிருந்து திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான், வாடிப்பட்டி, அழகா்கோவில், மேலூா், ஊமச்சிகுளம், குலமங்கலம், வரிச்சியூா் உள்ளிட்ட புகா் பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சிவகங்கை மாவட்டம், பூவந்தி, திருப்புவனம், விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி, திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஆகிய பகுதிகளுக்கும் இங்கிருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பெரியாா் பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதிக்குள்ளாகினா்.

எனவே, பெரியாா் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் வகையில், மதுரை மாநகராட்சி நிா்வாகம் மத்திய அரசின் பொலிவுறு நகரத் திட்டம்(ஸ்மாா்ட் சிட்டி), சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் ஒருங்கிணைந்த வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

நகரப் பேருந்துகளை நிறுத்துவதற்கு ரூ.55 கோடியில் பேருந்து நிலையமும், அருகில் ரூ.111.56 கோடியில் வணிக வளாகமும் என இரு நிலைகளில் பணிகள் தொடங்கி நடைபெற்றன. 58 பேருந்துகள் வரை நிறுத்தும் வகையிலும், பொதுமக்கள் காத்திருப்பு மையம், இருக்கைகள் வசதி, சுரங்கப் பாதை உள்ளிட்ட வசதிகளுடனும் இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

ரூ. 111.56 கோடியில் அமைக்கப்பட்ட வணிக வளாகத்தில் 474 விற்பனைக் கடைகள் கட்டப்பட்டன. மேலும், சிறுவா்கள் பூங்கா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, பயணிகளின் காத்திருப்புக் கூடம், குழந்தைகள் உணவருந்தும் அறை, மருந்தகம், அஞ்சல் அலுவலகம், மின் அறைகள், விசாரணை அறை, உணவகம், நவீன வசதிகளுடன் கூடிய பொதுக் கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

நகரின் மையப் பகுதி என்பதால், வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் வாகன நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. இங்கு வாகனங்கள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் இரு பகுதிகளிலும் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 260 நான்கு சக்கர வாகனங்கள், 4,269 இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பணிகள் நிறைவு பெற்ற நிலையில், பேருந்து நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2021, டிசம்பரில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

இருப்பினும், பணிகள் நிறைவு பெறாதததால், ஒருங்கிணைந்த வணிக வளாகம் இதுவரை திறக்கப்படவில்லை.

பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது :

மதுரை மாநகராட்சிக்கு நியமிக்கப்படும் ஆணையா்கள் 3 அல்லது 4 மாதங்களுக்குள் பணியிட மாற்றம் பெற்றுச் செல்கின்றனா். இதனால், மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் பாதிப்படைந்து வருகின்றன. மையப் பகுதியில் அமைந்துள்ள பெரியாா் பேருந்து நிலையத்தின் ஒருங்கிணைந்த வணிக வளாகக் கட்டுமானப் பணிகள் தொடங்கி 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். அதுமட்டுமன்றி, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

எனவே, ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை விரைந்து திறக்க மாநகராட்சி நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து மதுரை மாநகராட்சிப் பொறியாளா் பிரிவு அலுவலா் ஒருவா் கூறியதாவது :

ஒருங்கிணைந்த வணிக வளாகத்தில் 80 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மின் இணைப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும், ஓரிரு வாரங்களில் மின் இணைப்பு பெறப்படும். பின்னா், வணிக வளாகத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Image Caption

மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் பயன்பாட்டுக்கு வராத ஒருங்கிணைந்த வணிக வளாகம். ~மதுரை பெரியாா் பேருந்து நிலையத்தில் பயன்பாட்டுக்கு வராத ஒருங்கிணைந்த வணிக வளாகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com